Bhavani Devi Tamil News: 22வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், வாள்வீச்சு இறுதிபோட்டியில் சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி களமாடினார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவி, 15-10 என்ற புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு, இந்திய விளையாட்டு பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பவானி தேவிவின் குடும்ப பின்னணி…
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிவின் அசல்பெயர் சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி ஆகும். அவரது தற்போது குடும்பம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசித்து வருகின்றனர். தந்தை ஆனந்த சுந்தரராமன் ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சமல்கோட் நகரில் வசிக்கும் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர். சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு, அவர் கோயில் பூசாரியாக பணியைத் தொடர்ந்தார். பவானி தேவிவின் தயார் ரமணி இல்லத்தரசி ஆவார்.

சிஏ பவானிதேவி என அனைவராலும் அறியப்படும் பவானி, தண்டையார்பேட்டை உள்ள முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். அவருக்கு 10 வயது இருக்கும் போது வாள்வீச்சு விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. ஆனால், அவர் அதை விருப்பப்பட்டு தேர்வு செய்யவில்லை. உண்மையில் அவர் சிக்கிக்கொண்டார் என்றே கூறலாம்.
பவானி 6-ம் வகுப்பு படிக்கும்போது ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வாள்வீச்சு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பவானி தேவியின் முறை வந்த போது மற்ற விளையாட்டுகளில் ஆறு இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. இதனால் பவானி வாள்வீச்சை தேர்வு செய்துள்ளார்.

தொடக்கத்தில் மரத்தினாலான குச்சியை வைத்தே பயிற்சி மேற்கொண்ட இந்த வீர மங்கை, ஒரு வருடத்திற்குள், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தேசிய போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து அவரிடத்தில் குவிந்திருந்த திறனை பட்டையை தீட்ட தனது 16 வயதில், வீட்டை விட்டு வெளியேறி, கேரளாவின் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் இணைந்தார். அங்கு இந்தியாவின் மிகச்சிறந்த வாள்வீச்சு பயிற்சியாளர்களில் ஒருவரான சாகர் லாகுவின் கீழ் பயிற்சி பெற்றார்.

தற்போது, வாள்வீச்சில் முழுத்திறன் பெற்றுள்ள பவானி பல சர்வதேச போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று குவித்துள்ளார். இதில் அவர் இன்று வென்று எடுத்த காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்பும் உள்ளடங்கும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil