சரியான இடங்களில் பந்து வீசுவதில் கவனம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியின் ஆட்ட நாயகன் புவனேஷ்வர் கூறினார்.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 25) புனேயில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 230 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த இந்தியா 46 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, நியூசிலாந்தின் சரிவுக்கு வழிவகுத்த புவனேஷ்வர்குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பிறகு புவி அளித்த பேட்டியில், ‘அமைதியாகவும் நம்பிக்கையுடன் இருப்பது எனது இயல்பு. அதை ஒருபோதும் மாற்றிக் கொள்ளமாட்டேன். ஆட்டத்தைப் பொறுத்தவரை, பயிற்சியில் என்ன செய்கிறேனோ, அதை ஆட்டத்தில் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறேன்.
புதிய பந்துடன் பந்து வீசும் ஒவ்வொரு முறையும் பந்தை ஸ்விங் செய்யவே முயற்சிக்கிறேன். ஆனால் இன்று அது நடக்கவில்லை. எனவே சரியான இடத்தில் பந்து வீசுவதில் கவனம் செலுத்தினேன். நாம் நம்பிக்கையுடன் செயல்படும்போது, வேலை எளிதாகிவிடுகிறது.
இந்திய அணி நிர்வாகத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவங்கதான் என்னை மோட்டிவேட் பண்றாங்க. நான் பெரிய பலசாலி கிடையாது. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளை ஒப்பிடுகையில், உடல் தகுதி விஷயத்தில் இப்போது பலமாக இருக்கிறேன்’ என்றார் புவனேஷ்வர் குமார்.