இங்கிலாந்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் தொடர் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் பிரைன் லாரா, "என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தன. குறிப்பாக 2004-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் விளையாடிய இறுதி போட்டியை கூறலாம்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க போகின்றன. இங்கிலாந்து அணி இந்தமுறை கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு, இங்கிலாந்து அணி சிறந்த வீரர்களை கொண்ட அணியாக தற்போது உருவாகியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில்கூட இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற இங்கிலாந்துக்கு இம்முறை சாதகமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன" என்றார்.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வாகவில்லை. அதற்கு பதில் வங்கதேசம் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.