கிபி 1600ல் கிழக்கிந்திய கம்பெனி அமைக்கப்பட்டது. 1639ல் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 1757ல் பிளாசிப் போர் நடந்தது. இதில், ராபர்ட் கிளைவ் வெற்றி பெற்றார். இந்த வெற்றி இந்தியாவின் கருப்புச் சரித்திரத்திற்கு அஸ்திவாரமிட்டது.
வாணிபம் செய்ய சந்தை தேடி இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் நமது அரசியல் நடவடிக்கையிலும் மூக்கை நுழைத்தனர். கடல்வழி வாணிபத்தின் மூலமாக இந்தியா வந்த வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும் நாட்டையும் அபகரித்தனர்.
தமிழ்திரு நாடுதன்னை பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா - என்றான் பார்போற்றும் பாரதி.
இந்திய சுதந்திர வரலாற்றில் வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்த தமிழர் தம் பங்களிப்பு தலையாயதும் தவிர்க்க முடியாததுமாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களின் விளைவாக, ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் தெற்கிலும், பல தமிழகப் பகுதிகள் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தன. 1806 இல் வேலூர் புரட்சி முறியடிக்கப் பட்டபின், தமிழகத்தில் ஆங்கில ஆட்சிக்கு தீவிர எதிர்ப்பு எதுவும் எழவில்லை. 1857 இல் சிப்பாய்கலகத்தின் போதும் தமிழகம் அமைதியாகவே இருந்தது. 1942 இல் நடத்தப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் தமிழகத்தில் தீவிரமாக இருந்தது.
இந்தியாவை ஆட்சி செய்த வரை, ஆங்கிலேயர்களை நெருங்குவதற்கே இந்தியர்கள் அச்சப்பட்டனர். அந்தளவிற்கு இந்தியர்களை கொடுமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் இன்று ஒரு தமிழனின் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக வரிசையில் நிற்பதை பார்க்கும் போது ஏற்படும் பெருமையை மறைக்க முடியவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது இங்கிலாந்தின் வொர்ஷட்டைர் கவுண்டி கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்காக பயிற்சிக்கு வந்த அஷ்வினிடம் இங்கிலாந்து ரசிகர்கள் வரிசையில் நின்று ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். இந்த வீடியோவை அஷ்வினே தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
ஒருகாலத்தில் நம்மை ஆண்ட ஆங்கிலேயரின் வாரிசுகள் இன்று இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவனிடம் ஆட்டோகிராஃப் வாங்க வரிசையில் நிற்பது இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பெருமை தானே!.