ஜோஸ் பட்லர்… இங்கிலாந்தின் ‘X Factor’!

அவருக்கும் தெரியும், அணிக்கும் தெரியும்… அவரைப் பார்த்து எதிரணி இதுவரை இல்லாத அளவிற்கு அஞ்சுகிறது என்று!.

கடந்த ஒரு வாரமாக கிரிக்கெட் உலகில் Talkative வீரராக வருபவர் 27 வயதான இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 2016ம் ஆண்டு ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், 2016-17 என இரண்டு சீசனில் அந்த அணியில் இருந்த பட்லர் சொல்லிக் கொள்ளும்படி, எதுவும் பெரிதாக செய்யவில்லை. இதனால், நடந்து முடிந்த 2018 ஐபிஎல் ஏலத்தில் பட்லரை கழட்டிவிட்டது மும்பை. ஆனால், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அப்படியே கவ்விக் கொள்ள, வாங்கிய காசுக்கு செமயாக தனது பணியை நிறைவு செய்தார். இல்லை.. இல்லை.. அதற்கு மேலேயே செய்துவிட்டார்.

ராஜஸ்தான் அணிக்காக மொத்தம் 13 ஆட்டங்கள் ஆடிய பட்லர், 548 ரன்கள் குவித்தார்.

ஆவரேஜ் 54.80,

ஸ்டிரைக் ரேட் 155.24,

52 பவுண்டரிகள்,

21 சிக்ஸர்கள் .

2016-17 என இரு சீசனிலும் மொத்தமாகவே அவர் 50 பவுண்டரிகளும், 26 சிக்ஸர்களும் தான் அடித்திருந்தார். அதேபோல், 16-17 சீசன்களில் மும்பை அணிக்காக 255, 272 என மொத்தம் 527 ரன்களே எடுத்திருந்தார். ஆனால், இந்த சீசனில் மட்டும் 548 ரன்கள். இவரது இந்த முரட்டு ஃபார்மினால் பெரிதும் பயனடைந்து இருப்பது ராஜஸ்தான் அணி இல்லை… இங்கிலாந்து கிரிக்கெட் அணி தான். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக பெரிய ஃபார்மில் இல்லாத பட்லர், தொலைந்து போன தனது ஃபார்மை 2018 ஐபிஎல்-ல் கச்சிதமாக மீட்டு எடுத்துள்ளார்.

அதன் விளைவு, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 5-0 என ஒருநாள் தொடரில் மரண அடி வாங்கியது. இந்த ஒருநாள் தொடரில், ஜோஸ் பட்லர் மொத்தமாக 275 ரன்கள் எடுத்தார். அதில், ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது களமிறங்கிய பட்லர், 110 ரன்கள் எடுத்து, இறுதிவரை நாட் அவுட்டாக நின்று 207 ரன்கள் இலக்கை எட்ட வைத்தார். அதுமட்டுமின்றி, ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணியின் நான்காவது ஒயிட்வாஷ் சம்பவம் அரங்கேற காரணமாக அமைந்தார்.

இதன்பிறகு, நேற்று (ஜூன் 27) இரவு 11 மணிக்கு நடந்த ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து இடையேயான டி20 போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய பட்லர் 30 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். இப்போட்டியில் இங்கிலாந்து 221 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஒருநாள் தொடர் உட்பட தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து. இந்த வெற்றியில் பட்லர் பெரும் பங்கு வகித்துள்ளார்.

மே மாதத்தில் இருந்து ஜோஸ் பட்லரின் செயல்பாடு:

IPL – 67, 51, 82, 95*, 94*, 39
Tests – 14, 67, 80*
ODIs – 9, 91*, 11, 54*, 110*
T20I – 61

15 இன்னிங்ஸில் 11 முறை அரை சதம் கடந்திருக்கிறார். மொத்தம் 925 ரன்கள்.

ஜோஸ் பட்லரின் இந்த பார்ம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், ” அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்து வெற்றிப் பெற்றால், அதற்கு ஜோஸ் பட்லர் முக்கிய காரணமாக இருப்பார் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு வரை பட்லர் காயம் அடையாமல் இருந்தால், 50 ஓவர் உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்ல அருமையான வாய்ப்புள்ளது. அணிக்கு அவர் நிறைய அமைதியை அளித்துள்ளார். போட்டியன்று களமிறங்கி மைதானத்தின் நடுவே அவர் நின்றுக் கொண்டு, ஆட்டத்தை நன்கு கவனிக்கிறார். ஆட்டத்தின் போக்கை உற்று நோக்குகிறார்.

அவருக்கும் தெரியும், அணிக்கும் தெரியும்… அவரைப் பார்த்து எதிரணி இதுவரை இல்லாத அளவிற்கு அஞ்சுகிறது என்று!.

முக்கியமான தொடர்களின் போது கோப்பை வெல்லும் ஒவ்வொரு அணியிலும் ஒரு X Factor வீரர் இருப்பார். இதுதான் வரலாறு. அதுபோன்றதொரு X Factor இப்போது இங்கிலாந்து அணியில் பட்லர் தான்!.

என்று வாகன் தெரிவித்துள்ளார்.

ஆனால் பட்லரோ, ‘நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பொறுமையாக, சிறப்பாக ஆடி சதமடித்து அணியை வெற்றிப் பெற வைத்தது பற்றி எல்லோரும் பாராட்டுகிறார்கள். உண்மையில், களத்தில் அப்போது தோனி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என கற்பனை செய்து பார்த்தேன்.. அப்படியே விளையாடினேன், வென்றேன்’ என்கிறார் பவ்யமாக.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Buttler has the x factor vaughan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com