16வது ஆசிய கோப்பை தொடர் நேற்று முதல்தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரில் பாகிஸ்தானில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நேபாள அணியை பந்தாடிய பாகிஸ்தான் அபார வெற்றியைப் பெற்றது. இலங்கையில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இலங்கை அணி புரட்டி எடுத்தது. இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை சனிக்கிழமை (செப்டம்பர். 2ம் தேதி) இலங்கையின் பல்லகெலே மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் நேபாள அணியை தும்சம் செய்துள்ள பாகிஸ்தான் அதே உத்வேகத்துடன் களமிறங்கும். மறுபுறம் தீவிர பயிற்சி மேற்கொண்ட இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை சாய்த்து வெற்றியுடன் தொடங்க நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
காயத்தில் இருந்து மீளும் ராகுல்
இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த தொடருக்கு இந்தியா 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது. அதில் விக்கெட் கீப்பர்களாக கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். அதேவேளையில், ரிசர்வ் வீரராக விக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடருக்காக இலங்கை பறக்கும் முன், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 'கே.எல். ராகுலுக்கு சிறிய காயம் உள்ளது. எனவே முதல் இரண்டு ஆட்டங்களில் (பாகிஸ்தான், நேபாளம்) அவர் பங்கேற்க மாட்டார். விரைவில் அவர் குணமடைவார் என்று நம்புகிறோம். அதுவரையில் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருப்பார்!” என்று கூறினார்.
விக்கெட் கீப்பர் யார்? - சாஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
கே.எல். ராகுல் பெங்களூருவில் தன்னை மீட்டெடுத்து வரும் நிலையில், நாளை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமாட போவதில்லை. அதனால், அவரது இடம் வெற்றிடமாக உள்ளது. இருப்பினும், அவரது இடத்தை, அதாவது விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆடர் வீரராகவும் இளம் வீரர் இஷான் கிஷன் நிரப்புவார்.
இந்நிலையில், கே.எல். ராகுலுக்கு பதில் அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் ஏன் அந்த இடத்தில் களமிறங்க கூடாது என்கிற கேள்வியை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்விக்கு அவரால் ராகுலின் இடத்தில் விளையாட முடியாது என்பதுதான் நிதர்சனம். காரணம் என்னவென்றால், அவர் 17 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு இடம் பெறவில்லை. அவர் ரிசர்வ் வீரராக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
அப்படியென்றால், சஞ்சு சாம்சன் 17 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற முடியாதா? என்றால், அவரால் நிச்சயம் இடம் பிடிக்க முடிவும். ஆனால், அதற்காக 17 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற யாரையாவது ஒரு வீரரை அணியில் இருந்தே நீக்க வேண்டும். மேலும், அவர் எதற்காக அணியில் நீக்கப்பட்டார், காயம் ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கான முறையான சான்றிதழ்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வீரர் விலகிக் கொள்ளலாம்.
தற்போது கே.எல் ராகுள் அணியில் இருந்து விலக்கினால் மட்டுமே சஞ்சு சாம்சன் விளையாட வைக்க முடியும். ஆனால் அவரை முதன்மை விக்கெட் கீப்பராக இந்திய அணி நிர்வாகம் கருதுவதால் நிச்சயம் ராகுலை நீக்க மாட்டார்கள். ஒருவேளை, காயம் இரண்டு போட்டிகள் தாண்டியும் குணமடையாவிட்டால், சாஞ்சு-வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போதைக்கு கே.எல்.ராகுலின் இடத்தில் சஞ்சு சாம்சனால் விக்கெட் கீப்பராக விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.