இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக களம் இறங்கவுள்ளார். கடந்த 2015ல் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய ரெய்னா, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டி20 போட்டியை ஆடியிருந்தார். இதில், 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு, இப்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், "இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடந்த இரு ஆண்டுகளாக மிகக் கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறேன். இப்போது மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது, முதல் முறையாக வாய்ப்பு கிடைத்ததை போன்ற உணர்வைத் தருகிறது.
நான் எப்போதும் நேர்மறையாக சிந்திப்பவன். அணிக்கு திரும்புவதில் அதிக வேட்கை கொண்டிருந்த எனக்கு மீண்டும் இடம் கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் பயிற்சியில் ஈடுபடும் போதும், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் அந்த ஒரு தருணத்தை மட்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
How's that for a @ImRaina flourish! #TeamIndia #SAvIND pic.twitter.com/O0KJR4ldww
— BCCI (@BCCI) 17 February 2018
பின்னடைவுகள் உங்களுக்கு பாடங்களை போதித்து, உங்களின் மனதை வலுவாக்குகிறது. நாம் நினைப்பது எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தால், நினைப்பதை அடைய வேண்டிய வழிகளை நோக்கி உழைக்க வேண்டும். கிரிக்கெட்டில் உங்களுடைய திறன் குறித்து, நீங்களே கேள்விக் கேட்டுக் கொள்ளவேண்டும். அந்த திறனை ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும். இந்த இடத்திற்கு வருவதற்காக நான் சிறப்பாக என்னை தயார் படுத்திக் கொண்டேன்.
எனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்த நேரத்தில், நான் மனதளவில் மிகவும் வலிமையாக இருந்தேன். எனது குடும்பமும் அந்த மன வலிமைக்கு மேலும் வலிமை சேர்க்க உதவியது. தலைமை கோச் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் எனக்கு அளித்த ஆதரவு பல. யாராவது ஒருவர் வீழும் போது, இவர்களைப் போன்று ஆதரவு அளிக்கையில் நமது நம்பிக்கை அதிகரிக்கும். நான் மீண்டும் எனது வெற்றிப் பாதைக்கு திரும்ப நினைக்கிறேன். அதற்கு, இந்த டி20 தொடர் தான் தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தத் தொடரை மன ரீதியில் வலிமையாக எதிர்கொள்வது மிக முக்கியம்.
எனது மனதை சுவிட்ச் ஆன் செய்து, வலிமையாக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். தென்னாப்பிரிக்க தொடரை பசியுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்றார் கான்பிடன்ட் ரெய்னா.
வாழ்த்துகள் 'குட்டி தல'....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.