இந்தியா vs இலங்கை: இந்திய அணிக்கு காத்திருக்கும் புதிய சாதனை!

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால் புதிய சாதனை படைக்கும்

நேற்றுமுன்தினம் நடந்த இலங்கைக்கு எதிரான மாயாஜால இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்தது. பின், இடைவேளையின் போது சிறிது நேரம் மழை பெய்ததால், இந்திய அணிக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதல் விக்கெட்டிற்கு ரோஹித் – தவான் ஜோடி 109 ரன்கள் குவித்தது. அடுத்து 131 ரன்களுக்கு இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இலங்கை ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியை மிரட்டினார்.

ஒரே ஓவரில் லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், கேப்டன் விராட் கோலி என மூவரையும் போல்டாக்கினார்.

ஒருவழியாக ‘தல’ தோனி – புவனேஷ் குமார் ஜோடி அணியை மீட்டது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்த கூட்டணியால், இந்திய அணி 44.2-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. தோனி 45 ரன்களுடனும், புவனேஷ் 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அந்தப் போட்டிக்கு முந்தைய நாள் தான் தனது பள்ளித் தோழியை காதல் திருமணம் புரிந்தார் அகிலா தனஞ்செயா. அவர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ஆட்டத்தில் ஜெயிக்காமல் போனது நிச்சயம் அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த இரண்டாவது போட்டியில், தோனி மற்றும் புவனேஷ் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது இலங்கை அணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீண்ட நேர ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் இலங்கை அணியால் பந்து வீச முடியவில்லை. மூன்று ஓவர்கள் குறைவாக வீசியதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கண்டுபிடித்தார்.

ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது இலங்கை அணி மெதுவாக பந்து வீசியிருந்தது. மூன்று மாதத்திற்குள் மேலும் ஒருமுறை இவ்வாறு செய்ததால், கேப்டன் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதனால், நாளை (ஆகஸ்ட் 27) நடக்கும் மூன்றாவது போட்டியிலும், நான்காவது ஒருநாள் போட்டியிலும் தரங்கா விளையாடமாட்டார்.

அதேபோல், இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஃபீல்டிங் செய்கையில் இலங்கை ஓப்பனர் குணதிலகாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, தரங்கா மற்றும் குணதிலகா ஆகியோருக்குப் பதிலாக சண்டிமல் மற்றும் திரிமன்னே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தரங்காவிற்குப் பதிலாக சமரா கபுகேதரா கேப்டனாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா வெற்றிப் பெறும் பட்சத்தில், 3-0 என இத்தொடரை கைப்பற்றும். இதனால், இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 7 ஒருநாள் தொடர்களை வென்ற சாதனையை இந்தியா படைக்கும். அதிலும், தொடர்ச்சியாக நான்கு தொடர்களை இலங்கை மண்ணிலேயே இந்தியா கைப்பற்றி சரித்திரம் படைக்கும்.

அதேபோல், நாளைய போட்டியில் தோனி 12 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ள அசாருதீனை (9378 ரன்கள்) பின்னுக்கு தள்ளி, தோனி அந்த இடத்தைக் கைப்பற்றுவார்.

இதுவும் ஒரு சாதனை என்றே சொல்லலாம். ஆனால், இது நல்ல சாதனையா அல்லது மோசமான சாதனையை என்பது கேள்விக்குறியே. இந்த வருடத்தில் மட்டும் இலங்கை அணியை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் வழிநடத்தும் ஐந்தாவது கேப்டனாக சமரா கபுகேதரா தற்போது பொறுப்பேற்றுள்ளார். இந்த வருடத்தில் ஏஞ்சலா மேத்யூஸ், தினேஷ் சந்திமல், உபுல் தரங்கா, ரங்கனா ஹெராத் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close