ஐபிஎல்-ல் இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கும் 'எலிமினேட்டர் 2' போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளும் லீக் போட்டிகளில் சந்தித்த போது, இருமுறையும் மும்பையே வென்று, கொல்கத்தாவிற்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. அதேசமயம் 'இது வேற வாய்' என்பது போல், இன்று ஆட்டம் நடக்கும் களம் முற்றிலும் வித்தியாசமானது.
ஏனெனில், போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு இடம். இதனால், எந்த அணி வெல்லும் என்பதை கணிப்பது இயலாத காரியம். ஆடுகளத்தின் தன்மையை எந்த அணி கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கிறதோ, அந்த அணிக்கே 'ஜெய் ஹோ'.
மும்பையை பொறுத்தவரை, சொந்த மண்ணில் நடந்த 'குவாலிஃபயர்' போட்டியில், ஓவர் கான்ஃபிடன்ஸால் புனேவிடம் தோற்றது எனலாம். எனவே, கொஞ்சம் நிதானம் தேவை. ரோஹித், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் பிரகாசித்துவிட்டால், வெற்றி நிச்சயம்.
கொல்கத்தாவை பொறுத்தவரை, பெரிதாக குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. கேப்டன் கம்பீர் அணிக்கு பெரிய பலம். அவரது உண்மையான ஆக்ரோஷம் அணிக்கு பெரிதாகவே கைகொடுக்கிறது.
ஆகமொத்தம், தற்போது இரு அணிகளும்,
"கொல்கத்தா - விளையாடு மங்காத்தா.... விடமாட்டா எங்காத்தா... இந்த வெற்றி கிட்ட வராதா....
மும்பை - ஆடாம ஜெயிச்சோம டா... நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா... ஓடாம ரன் எடுப்போம்.. சும்மா உட்கார்ந்தே பெண்டெடுப்போம்"
என்ற மோடில் தான் உள்ளன. யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மற்றொரு கூடுதல் தகவல் என்னவெனில், பெங்களூருவில் இன்று இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்பு 70 சதவிகிதம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.