ஐபிஎல் எனும் எக்ஸ்பிரஸ், பல ஆண்டுகளாக பல்வேறு பெட்டிகளுடன் பயணம் செய்து, தற்போது 12வது ஆண்டில் 8 பெட்டிகளுடன் தனது அடுத்த பயணத்திற்கு ஏறக்குறைய தயாராகிவிட்டது. எக்ஸ்பிரஸ் தனது பச்சை விளக்குக்காக காத்திருக்கிறது. சிக்னல் கிடைத்தவுடன் ஒவ்வொரு பெட்டியும் சீறிப்பாய தயாராக உள்ளன. ஆனால், பெட்டிகள் எவ்வளவு தான் வேகமாக போனாலும், அதனால் அதன் எஞ்சின் பெட்டியை விஞ்சி ஒருநாளும் செல்ல முடியாது. அந்த என்ஜினாக 12 வருடங்களும் ராஜநடை போட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் சிஎஸ்கே.
இத்தனை அணிகள் இருந்தும், அந்த மஞ்சள் மேகத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு மோகம்?
ஒரே காரணம், ரசிகர்கள்.
தமிழக ரசிகர்கள் உணர்வுகளுடனும், உணர்ச்சிகளுடனும் மிக எளிதாக, விரைவாக கனெக்ட் ஆவதே, இந்த ஆதரவுக்கு.... மன்னிக்கவும், இந்த வெறித்தனத்துக்கு காரணம்.
சென்டிமென்ட்டல் இடியட்ஸ்.... என்று தென்னிந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை சொல்லக் கேட்டிருப்போம். அதுதான், இந்த எல்லையில்லா பிணைப்புக்கு காரணம். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவ்வளவு தான்.... அதன் பிறகு காலத்தாலும் அதை அழிக்க முடியாது. இதுவே, தமிழகத்தின் வரலாறு. தமிழர்களின் மரபு.
இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும், விதிவிலக்கா என்ன?
அதேபோல், தனக்கு எதிரில் நிற்க தகுதியுடையவர் யார் என்பதை தீர்மானிப்பதிலும், நம்மவர்களை அடித்துக் கொள்ள முடியாது. இன்று வரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே, அந்த அதிர்ஷ்டக்கார அணியாக வலம் வருகிறது.
மும்பையை தவிர்த்துவிட்டு, மற்ற ஏழு அணிகளுடன் சென்னை விளையாடும் போது பாருங்களேன்... நம் ரசிகர்களிடம் ரியாக்ஷன் இருக்கும். ஆனால், மும்பையுடன் மோதும் போது தான், ரியாக்ஷனோடு எமோஷனலும் இருக்கும்.
சிஎஸ்கே நிர்வாகத்தின் பலம் என்ன?
நம் ரசிகர்கள் உணர்வுகளுடன் விரைவாக கனெக்ட் ஆவார்கள் என்றால், சிஎஸ்கே ரசிகர்களுடன் அதிவிரைவாக கனெக்ட் ஆகிறது. ரசிகர்களின் தேவை, ஆர்வம், எண்ணம் போன்றவற்றை முன்கூட்டியே கணிக்கும் வல்லமையை சிஎஸ்கே நிர்வாகம் பெற்றிருப்பது ஏனோ அதிசயமே!
2018ம் ஆண்டு, சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து ரசிகர்களை புனே அழைத்துச் சென்ற ஒரு சான்று போதும், ரசிகனுக்கு அந்த நிர்வாகம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிய. யோசித்துப் பாருங்கள், ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து, அதில் ரசிகர்களை தேர்வு செய்து, அவர்களை போட்டி நடக்கும் ஊரில் தங்கவைத்து, சாப்பாடு கொடுத்து, மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவது என்பது நீங்கள், மற்ற அணி நிர்வாகங்களிடம் இருந்து கற்பனை கூட செய்து பார்க்க முடியாத செயல்.
ரசிகன் எட்டடி பாய்ந்தால், சிஎஸ்கே நிர்வாகம் 16 அடி பாய்கிறதே!
ஆனால், மேற்சொன்ன காரணங்கள் அனைத்தையும் விட, மிக மிக முக்கியமான உணர்வுப்பூர்வமான அணுகுமுறை ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் கடைப்பிடித்து வருவதை நீங்கள் பார்க்க முடியும்.
வீரர்களிடம் இருந்து வரும் தேவைகள் முடிந்த பிறகு, அவர்கள் தூக்கி எறியாமல் இருப்பது.
ஆம்! சிஎஸ்கே அணியை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருபவர்களுக்கு இது புரியும். சிஎஸ்கே அணிக்காக தேர்வாகும் வீரர்களை, அவ்வளவு சீக்கிரம் அடுத்தடுத்த தொடர்களில் நிர்வாகம் நீக்காது. குறிப்பாக, பிளேயிங் லெவனில் இடம்பிடித்து, அணிக்காக சிறப்பாக விளையாடுபவர்களை எந்த சீசனிலும் சிஎஸ்கே மாற்றாது.
ஒரு குடும்பம் போலவே, அது பயணித்து வருகிறது. பிஸ்னஸ், மாற்ற வேண்டிய கட்டாயம் போன்ற இக்கட்டான சில சூழல்களைத் தவிர்த்து, தங்கள் அணிக்காக விளையாடும் வீரர்கள், தங்கள் சொத்து என்று நினைப்பதே சிஎஸ்கே ஃபார்முலா. இதை வெற்றிக்கான ஒரு ரகசிய ஃபார்முலாவாகக் கூட அவர்கள் கையாளலாம். ஆனால், முடிந்தவரை அணியின் கட்டமைப்பை உடைக்காமல் பயணிப்பதையே சிஎஸ்கே வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
இதன் பலம், வீரர்களின் வார்த்தைகளில், மனதில் எதிரொலிப்பதை நாம் காண முடியும். வீரர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை இந்த அணுகுமுறை உருவாக்குகிறது.
கடந்த 2019 சீசனில், வாட்சன் அடுத்தடுத்து தொடர்ச்சியாக போட்டிகளில் சொதப்பினாலும், அவருக்கு கடைசி வரை வாய்ப்பளித்தது சிஎஸ்கே. தற்போதைய சீசனிலும் அவர் விளையாடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வேறு எந்த அணியில் இருந்திருந்தாலும், அவரது 2019 சீசன் செயல்பாட்டிற்கு நிச்சயம் தூக்கப்பட்டிருப்பார். அதுதான் சிஎஸ்கே.
மேலே நாம் பல கனெக்டிவிட்டிகள் குறித்து பேசினோம். அந்த கனெக்டிவிட்டிகளுக்கு எல்லாம் ஒரே பாசிட்டிவிட்டியாக இருப்பது நம் மகேந்திர சிங் தோனி.
சிஎஸ்கே-வின் இந்த 'கூட்டுக் குடும்பம்' பார்முலாவுக்கு அடித்தளமிட்டதும், தூண்கள் அமைத்து, சுற்றுச் சுவர்கள் எழுப்பி, இன்று கோட்டையில் கொடியேற்றி சிஎஸ்கேவை கம்பீரமாக நிற்க வைத்த சூத்திரதாரியும் தோனி தான்.
ஏலத்தின் போது, மற்ற அணிக்காரர்கள் இவரை எடுப்பதா, அவரை எடுப்பதா, இவரை விடுவதா, அவரை விடுவதா என்று மல்லுக் கட்டி மல்லாந்து கிடக்க, மஞ்சள் உடைக்காரர்கள் மட்டும், எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், இரண்டு மூன்று வீரர்களை மட்டும் எடுத்துவிட்டு, கூலாக கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவதற்கு காரணமும் இந்த தோனி தான்.
அடிக்கடி வீரர்களை மாற்றினால் தானே, இந்த அமளிதுமளி எல்லாம்.!
உணர்வுகளுடன் எளிதாக கனெக்ட் ஆகும் தமிழ் ரசிகர்கள், ரசிகர்களை மதிக்கும் நிர்வாகம், இவை இரண்டிற்கும் பாஸிட்டிவிட்டி கொடுக்கும் ஒற்றைத் தலைவன் என்பதே சிஎஸ்கே எனும் எக்ஸ்பிரஸ் எஞ்சினின் அசைக்க முடியா வெற்றி ஃபார்முலா.
இந்த கட்டமைப்பு இருக்கும் வரை, சிஎஸ்கே எனும் எஞ்சினை, மற்ற பெட்டிகளால் எத்தனை அசுர வேகத்தில் பயணித்தாலும், வீழ்த்த முடியாது என்பதே உண்மை!
காத்திருக்கிறோம் 2020 ஐபிஎல் களத்திற்கு!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.