தமிழ்நாடு பிரீமியர் லீக் 2017 தொடரில், நத்தத்தில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்பே பலத்த மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஓவர் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது. டாஸ் ஜெயித்த கில்லீஸ் கேப்டன் சதீஷ், பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய திருச்சி அணியில், கேப்டன் பாபா இந்த்ரஜித்தும், பரத் சங்கரும் முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் (5.2 ஓவர்) எடுத்து ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். பரத் சங்கர் 25 ரன்னிலும், அடுத்து வந்த அகில் ஸ்ரீநாத் 23 ரன்னிலும் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பாபா இந்த்ரஜித் 34 ரன்னிலும் (30 பந்து, 6 பவுண்டரி) வெளியேறினர்.
மிடில் ஓவர்களில் திருச்சி அணியின் ரன் விகிதத்தை, சேப்பாக் அணி வெகுவாக கட்டுப்படுத்தியது. 10-வது ஓவரில் இருந்து 14-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. அதேசமயம், ஃபீல்டிங்கில் சேப்பாக் அணி சற்று சொதப்பியது. இரண்டு கேட்ச்சுகளை அவர்கள் தவறவிட்டனர்.
நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்கள் முடிவில், திருச்சி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் யோமகேஷ் 3 விக்கெட்டுகளும், தமிழ்குமரன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
133 ரன்கள் எனும் சேசிங்கை துரத்திய சேப்பாக் அணியின் தொடக்க வீரர்கள் கோபிநாத் மற்றும் தலைவன் சற்குணம், முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர்.கோபிநாத் 28 ரன்களும், சற்குணம் 42 ரன்களும் எடுத்தனர். பின் ஆண்டனி தாஸ் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதனால், சேப்பாக் அணி 15.4-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 136 ரன்கள் எடுத்து வென்றது.
இதன்மூலம், இத்தொடரில் 6-வது ஆட்டத்தில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதனால், இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆஃப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தகுதி பெற்றது. முதலாவது சீசனிலும் சேப்பாக் அணி 2-வது சுற்றுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 4-வது தோல்வியை தழுவிய திருச்சி வாரியர்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.