சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஆயத்தங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
188 நாடுகளும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்களைகளுடன் நடக்கவிருக்கும் இந்த சர்வதேச செஸ் போட்டி பல்வேறு வயது பிரிவினர்களுடன் நடைபெறவிருக்கிறது.
மகாபலிபுரத்திற்கு அருகில் நடக்கவிருக்கும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, தயார்நிலையை மதிப்பிடும் சோதனைப் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தினர். இதில், தி.மு.க.வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இப்போட்டியில் பங்குகொண்டார்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சென்னை மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் 1,414 வீரர்கள் பங்குகொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் அமைச்சர்களான மா. சுப்ரமணியன், டி.எம்.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1,414 வீரர்களுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையானது உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியில் அமைக்கப்பட்டது என்று ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.
இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படும் சர்வதேச செஸ் போட்டியானது, சென்னையின் கிழக்கு கடற்கரைச்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை ஆகியவை சந்திக்கும் புள்ளியில் அமைந்திருக்கும் பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறவுள்ளது.
ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா மூன்று இந்திய அணிகளுடன் 188 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வின் சின்னமான 'தம்பி'யின் சிலை, சென்னையின் பல்வேறு இடங்களில் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், ஜூலை 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
ஒலிம்பியாட் போட்டியை மாபெரும் வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் தமிழக அரசு பெரும் முயற்சி எடுக்கிறது என்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil