சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னம், பாடல், இலட்சினை உள்ளிட்டவற்றை அவர் வெளியிட்டார்.
விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் விளம்பர தூதரான தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் ஸ்டாலின், தோனி இருவருமே தங்கள் உழைப்பால் வளர்ந்த நபர்கள்" எனப் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சென்னையின் செல்லப் பிள்ளை தோனி. நானும் எம்.எஸ் தோனி ரசிகர். அவர் தொடர்ந்து சி.எஸ்.கே அணிக்காக விளையாட வேண்டும். சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர் தோனி. தேசிய அளவில் மிகப்பெரிய அடையாளமாக உள்ளார். பல லட்சம் பேருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார். எனவே தான் அவர் அறக்கட்டளையின் தூதராக உள்ளார். தமிழகத்தில் பல தோனிகள் உருவாக வேண்டும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“