நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான், 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டும் எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து, 15.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. அதிகபட்சமாக காலின் மன்ரோ 49 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது வென்றவரும் இவரே.
காலின் மன்ரோ தான் சர்வதேச டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன் தரவரிசையில் தற்போது முதலிடம் வகிப்பவர். தனது கடைசி ஆறு டி20 இன்னிங்ஸில் 388 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும்.
109*, 7, 53, 66, 104, 49*
இதுவரை 38 போட்டிகளில் ஆடியுள்ள மன்ரோ 947 ரன்கள் தான் எடுத்துள்ளார். ஆனால், அதில் கடைசி ஆறு இன்னிங்ஸில் மட்டும் 388 ரன்களை விளாசியுள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 161.05. இதுவரை 61 சிக்ஸர்களை விளாசியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், 13 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார். ஐபிஎல்-ல் இதுவரை 4 போட்டியில் மட்டுமே மன்ரோ ஆடியிருக்கிறார்.
தற்போது டாப் டி20 வீரராக வலம் வருவதால், இம்மாதம் பெங்களூருவில் நடக்கவுள்ள ஐபிஎல் ஏலத்தில் மன்ரோவை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவும் என தெரிகிறது.