இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வரும் வாரங்களில் நடக்கவுள்ள போட்டிகளில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டி20 தரவரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய டி20 தரவரிசைப்படி, 131 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இதனை தக்க வைக்க, ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ள முத்தரப்பு டி20 தொடரில், பாகிஸ்தான் சிறப்பாக விளையாட வேண்டும். ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதும் அந்த முத்தரப்பு டி20 தொடர், ஜூலை 1-8 வரை நடக்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஒருநாள் ரேங்கிங்கில் ஆறாவது இடத்தில் இருந்தாலும், டி20ல் 126 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா நாளை (ஜூன் 27) இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
தரவரிசையில் முதலிடம் பிடிக்க வேண்டுமெனில், நாளைய போட்டியிலும் வென்று, முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டி உட்பட அந்த அணி விளையாடும் நான்கு போட்டிகளிலும் வென்றால், 126ல் இருந்து 137க்கு ஜம்ப் ஆகி முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரில், அது விளையாடும் நான்கு போட்டியிலும் வென்றால் கூட, 131 புள்ளியிலிருந்து 136 புள்ளிகள் தான் எடுக்க முடியும். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை, 123 புள்ளிகளுடன் டி20 ரேங்கிங்கில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக இந்தியா விளையாடும் ஐந்து டி20 போட்டிகளிலும் வென்றால், இந்திய அணி முதலிடம் பிடித்துவிடலாம். அதாவது, நாளை (ஜூன் 27) தொடங்கவுள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் டி20 தொடர், ஜூலை 3ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என அனைத்தையும் வென்றால், 127 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடிக்கலாம்.
அதில் ஒரு சிறிய சிக்கல் என்னவெனில், முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக சில அதிர்ச்சி தோல்விகளை ஜிம்பாப்வே அளிக்க வேண்டும். அவ்விரு அணிகளும் அப்படித் தோற்றால், இப்போது உள்ள புள்ளிகள் பெருமளவு சரியும். இதனால், இந்தியா 127 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கலாம். லைட்டா தல சுத்துதுல...சேம் ஃபீலிங்!. பட், வாய்ப்புகள் இருக்கு!
இங்கிலாந்தை பொறுத்தவரை 115 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை, ஆஸ்திரேலியாவை வென்று, இந்தியாவை 3-0 என வீழ்த்தி, ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தால் இங்கிலாந்து முதலிடம் பிடித்துவிடும்.
நாளை தொடங்கி வரும் ஜூலை 8ம் தேதிக்குள் அடுத்த நம்பர்.1 டி20 அணி யார் என்பது தெளிவாகிவிடும். அடுத்த டி20 தரவரிசை, ஜூலை 9ம் தேதியன்று ஐசிசி வெளியிடுகிறது.