இந்தாண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜுலை 22-ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி பாட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.
கடந்த ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், நடப்பு தொடரில் விளையாட தூத்துக்குடி அணிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கவுள்ள தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணி சார்பில், வீரர்களின் செலவுக்காக தூத்துக்குடி இந்தியன் வங்கியில் 5 கோடியே 21 லட்சம் கடன் பெறப்பட்டது.
இதனை முறையாக திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, இந்தியன் வங்கி சார்பில் தூத்துக்குடி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், தற்போது நடக்கவுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் விளையாட தூத்துக்குடி அணிக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்தியன் வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடனை திரும்ப செலுத்தாத நிலையில் தூத்துக்குடி அணிக்கு கோர்ட் தடை விதித்திருப்பதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை எவ்வளவு தொகையை திரும்ப செலுத்தியுள்ளனர் என்பன போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.
https://www.youtube.com/embed/K3x2-u2B5mk