இன்சமாம் உல் ஹக்.... 90's கிட்ஸ் அதிகம் விரும்பிய அல்லது வெறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் எனலாம். ஏனெனில், மாற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவை அவர் அதிகம் நேசித்தது தான். இந்தியாவுக்கு எதிராக எப்போது களமிறங்கினாலும், 200 சதவிகித கான்ஃபிடன்ட்டுடன் களமிறங்கி, இந்திய ரசிகர்களுக்கு பேதி வர வைக்காமல் இருக்க மாட்டார். அவருக்கு இந்திய அணிக்கு எதிராக அடிப்பது என்றால் அவ்வளவு பிடிக்கும்.
அவர் பேட்டிங் செய்யும் போது, மைதானத்தில் மொத்தமாக மூன்று ஸ்டெம்ப்புகள் மட்டுமே இருக்கும்... அதாவது கண்களுக்கு தெரியும். பின்னே, பேட்டிங் பண்ணும் போது மூணு ஸ்டெம்ப்பையும் மறைச்சிக்கிட்டு நின்னா!!.... பவுலருக்கு ஸ்டெம்ப்பும் கண்ணுக்கு தெரியாது, அவுட்டும் ஆக மாட்டார்.
ஒருபக்கம் நம்ம பவுலருங்க ஏகத்துக்கும் கடுப்பில் இருக்க, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நம்ம ரசிகர்களோ, 'அட இந்தாளுக்கு எண்டே கிடையாதா'-னு வெறுப்பின் உச்சத்தில் இருப்பார்கள்.
அகர்கர் பந்து வீச வரும் போது அம்மனை கும்பிடுவது, நெஹ்ரா பந்து வீச வரும் போது அல்லாவை கும்பிடுவது, ஹர்பஹன் பந்து வீச வரும் போது ஏசுவை கும்பிடுவது என அனைத்து கடவுள்களையும் கும்பிடும் ரசிகர்கள், ஜாகிர் கான் பந்து வீச வரும் போது, அவரையே கும்பிடுவார்கள்.
கும்பாபிஷேகம் மட்டும் நடத்தாத இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இன்சமாம் அவுட் ஆக வேண்டும் என்பதற்கே.
அந்தளவு அவர் நம்மை பயமுறுத்திய மெகா போட்டி ஒன்றையும், அதில் முகமது கைஃபின் ஆகாய டைவ் கேட்ச் குறித்த பிளாஷ்பேக்கை இங்கே பார்ப்போம்.
2004ம் வருடம்... பாகிஸ்தானுக்கு தாதா கங்குலி தலைமையிலான நம்ம டீம் சுற்றுப்பயணம் செய்திருந்தது. மார்ச் 13ம் தேதி இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டியில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அப்போவெல்லாம் இந்த ஸ்கோர் என்பது 'யய்யாடி!' ரகத்தில் வரும். ராகுல் டிராவிட் 99 ரன்களில் அக்தர் ஓவரில் போல்டான சம்பவம் தான் சோகம். இருப்பினும், வெற்றி கன்ஃபார்ம் என்று களமிறங்கிய இந்திய அணியின் கைகளில் இருந்து, மெல்ல மெல்ல போட்டியை தன் பக்கம் கொண்டு வந்தது பாகிஸ்தான்.
முகமது யூசுப் 73 ரன்கள் எடுக்க, நம்ம 'மலை'... அதாங்க இன்சமாம், சதம் அடித்து ஒரு காட்டு காட்டுக் கொண்டிருந்தது. யார் போட்டாலும் அடி தான்.
42 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் 278/3.
இன்சமாம் - 122 (101), யூனிஸ் கான் 38 (44).
இரண்டு பேரும் களத்தில் நிற்க, எப்படி இருக்கும் நம்மாளுங்களுக்கு.
சோளமுத்தா போச்சா!! என்று டர்ரு ஆகிக் கொண்டிருந்த வேளையில், முரளி கார்த்திக் குத்தும் இல்லாமல், மதிப்பும் இல்லாமல் குத்து மதிப்பாக வீசிய 42.1வது ஓவரில், விக்கெட் கீப்பர் டிராவிட் கேட்ச் பிடிக்க, முனகிக் கொண்டே வெளியேறினார் இன்சமாம்.
அதே போட்டியில், கடைசிக் கட்டத்தில் ஜாகீர் ஓவரில், சோயப் மாலிக் ஸ்ட்ரெய்ட்டாக அடித்த ஷாட்டை, முகமது கைஃப் பாய்ந்து பிடித்தது வேர்ல்டு கிளாஸ் சம்பவம். இறுதியில், பாகிஸ்தான் 344 ரன்கள் மட்டும் எடுக்க, வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது இந்தியா.
அந்த போட்டியின் போது, பல பேருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.