தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் : சரிவில் இருந்து மீண்டு இந்தியா வெற்றி

கிரிக்கெட்டில் இந்திய அணி முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் துணையுடன் 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றிருக்கிறது.

கிரிக்கெட்டில் இந்திய அணி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் துணையுடன் 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றிருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்ந்த டூராக, இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் அமைந்தது. முதல் 2 டெஸ்ட்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்க அணியின் மொத்தம் 40 விக்கெட்டுகளை (4 இன்னிங்ஸ்) வீழ்த்தினர்.

வெளிநாட்டு டூரில் இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாடுதான் இது! ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை குவிக்காததால் இந்திய அணியால் வெற்றியை கைப்பற்ற முடியவில்லை. 3-வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஓரளவு கை கொடுத்தால் வெற்றி சாத்தியம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட கூடுதலாக 7 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 247 ரன்கள் சேர்ந்தது.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இன்று (27-ம் தேதி) ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி ஒருகட்டத்தில் ஆரம்பத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரும், ஹசிம் அம்லாவும் ஜோடி சேர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக முதல் 2 டெஸ்ட்களில் மட்டுமல்லாது, இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் வரை கலக்கலாக பந்து வீசிய பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் சரியான லென்த் மற்றும் லைனில் இன்று பந்து வீசவில்லை.

முகம்மது ஷமியின் பந்துவீச்சும் தொடக்கத்தில் மோசமாகவே இருந்தது. இஷாந்த் சர்மா சரியான முறையில் பந்து வீசினாலும் விக்கெட் சுலபத்தில் விழுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தென் ஆப்பிரிக்காவின் வெற்றி உறுதி என்றே நம்பப்பட்டது.

52.4-வது ஓவரில் இஷாந்து சர்மா பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அம்லா (52 ரன்கள்) அவுட் ஆனார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதன் பிறகு டீன் எல்கர் ஒருபுறம் நங்கூரம் பாய்ச்சி நின்றபோதும், மறுபுறம் வந்தவர்கள் எல்லாம் மளமளவென சரிந்தார்கள்.

அபாயகரமான பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் 6 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்தார். தென் ஆப்பிரிக்கா கேப்டன் பாப் டுபிளிஸை (2 ரன்கள்) இஷாந்த் சர்மா போல்டு ஆக்கினார். கடைசி வரிசை விக்கெட்டுகளை முகம்மது ஷமி அடியோடு அள்ளினார். மொத்தம் 177 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆனது.

டீன் எல்கர் கடைசி வரை அவுட் ஆகாமல் 86 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்திய தரப்பில் ஷமி 5 விக்கெட்டுகள், பும்ரா மற்றும் இஷாந்த் தலா 2 விக்கெட்டுகள், புவனேஷ்வர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக மைதானத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது.

வெளிநாட்டு மண்ணில், அதுவும் அபாயகரமான ஒரு மைதானத்தில் முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துணையுடன் இந்திய அணி பெற்றிருக்கும் வெற்றி, உலகின் எந்த ஆடுகளத்திலும் இந்திய அணியால் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை தரும். அதிலும் வெற்றி கைநழுவிப் போனது போன்ற சூழலில், தென் ஆப்பிரிக்காவின் 9 விக்கெட்டுகளை 53 ரன்களில் சுருட்டியது பெரும் சாதனை!
எனினும் முதல் இரு டெஸ்ட்களில் வெற்றி பெற்றதன் மூலமாக 2-1 என டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது.

ஆட்ட நாயகனாக ஆல்ரவுண்டராக ஜொலித்த புவனேஷ்வர் குமாரும், தொடர் நாயகனாக தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆல் ரவுண்டராக பிரகாசித்த பிலாந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close