Cricket news in tamil: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. எனவே தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 2 வது போட்டியில், ஐபிஎல் போட்டிகளில் அசத்திய மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானார். ஆனால் நேற்று செவ்வாய் கிழமை நடந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து கேப்டன் கோலி கூறுகையில், ‘ரோகித் சர்மா அணிக்கு திரும்புவதால் சூர்யகுமார்க்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை’ என்றார். இதற்கிடையில் முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிதும் சோபிக்காத தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்ப்பட்டுள்ளது.
‘சிவப்புமண் ஆடுகளம் எவ்வாறு நடந்து கொள்ளும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்திய அணி அதன் முடிவுகளை எடுக்கக்கூடாது’ என்று முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோப்ரா, “நீங்கள் முதலில் ஆடுகளத்தின் மேற்பரப்பை சரியாக அணுக வேண்டும். ஏனென்றால் ஆடுகளம் எப்படி உள்ளது என்று அணுகாமல், நீங்கள் எப்படி விளையாட உள்ளீர்கள் என்பது குறித்து உங்களால் விவாதிக்க முடியாது. மேலும் அறிமுகமாகிய முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்கப்படாத வீரரிடம், அடுத்த போட்டியில் அவரை தேர்வு செய்யவில்லை என்ற செய்தியை கூறியவர் யார் என்று எனக்கு வியப்பாக உள்ளது.
இஷான் கிஷன் 3வது நபராக பேட்டிங் செய்கிறார். அப்படியென்றால், கேப்டன் கோலி அவருக்கு பிடித்த இடத்தில் இறங்க விரும்பவில்லை. மற்றும் பந்துவீச்சிற்கு 5 பந்துவீச்சாளர்களை கொண்டு வந்துள்ளீர்கள். இதுபோன்று புதிதாக நீங்கள் முயற்சிக்கிறீர்கள். இருப்பினும் இரண்டாவதாக தான் பந்து வீச உள்ளீர்கள். எனவே நீங்கள் 10-15 ஓவர்களிலேயே அதிக ரன்களை சேர்க்க முயற்சி செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளர்.
சூர்யகுமாருக்கு வாய்ப்பு தவறியதில் அவர் மீது எந்த தவறும் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் அவருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கும். டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்ட இந்திய அணி, ரோகித் சர்மா – கே.எல் ராகுல் ஜோடியை களமிறக்க முடிவு செய்திருக்கலாம் என்று கருதுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் கூறியுள்ளார்.
“என்னுடைய ஆதரவை சூர்யகுமார் யாதவுக்கு கொடுக்க விரும்புகிறேன். அவர் 2 வது போட்டியில் அறிமுகமானார், ஆனால் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் 3வது போட்டியில் இருந்து கைவிடப்பட்டுள்ளார். இது நான் பார்த்த மிகக் கொடுமையான விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சர்மா மற்றும் ராகுல் ஜோடி விளையாடினால் அவர்களுக்குள் நல்ல பார்ம் இருக்கும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள். மேலும் இதை எதிர் வரும் டி-20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக பார்க்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில், இஷான் கிஷன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் என்று நான் நினைக்கிறேன். கடந்த போட்டியில் ஒரு இடக்கை மற்றும் வலக்கை பேட்ஸ்மேன்களை களமிறங்கினார். நான் ஒருவேளை இந்திய அணியின் தேர்வாளர் அல்லது கேப்டன் அல்லது பயிற்சியாளராக இருந்தால் அது போன்ற முடிவைத்தான் எடுப்பேன். ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா – ராகுல் ஜோடியை முயற்சிக்கிறது” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil