பயிற்சி ஆட்டத்தில் வெற்றியை ருசித்த இந்தியா; அணியின் நிலை என்ன?

T20 World Cup, India vs england warm-up game report Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ‘மேட்ச் பினிஷர்’ என வர்ணிக்கப்படும் ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்டிக் பாண்டியா நேற்றைய பயிற்சி ஆட்டத்திலும் ஒரு ஓவர் கூட வீசவில்லை.

Cricket news in tamil: Ind vs eng warm-up game report

ND vs ENG T20 World Cup warm-up match highlights in tamil: 7வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடவுள்ளன. மற்ற 8 அணிகளுக்கான லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வரும் 24-ம் தேதி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் 2 பயிற்சி ஆட்டங்களில் அந்த அணி விளையாடுகிறது. அதன்படி நேற்று இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ அதிகபட்சமாக 49 ரன்களும், இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய மொயீன் அலி 20 பந்துகளில் 43 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து 189 ரன்கள் கொண்ட இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் கேஎல் ராகுல் 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்திருந்த இஷான் கிஷன் 46 பந்துகளில் 70 ரன்கள் குவித்த நிலையில் ரிட்டேட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த கேப்டன் கோலி 11 ரன்னுடனும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் களத்தில் இருந்த ரிஷப் பண்ட் (14 பந்துகளில் 29 ரன்கள், 1 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட) – ஹர்டிக் பாண்டியா (9 பந்துகளில் 8 ரன், 1 பவுண்டரி உட்பட) ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால் இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

வலுவான ஓப்பனிங்…

நடப்பு உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அதன் முதல் பயிற்சி ஆட்டத்தில் முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இந்திய அணியின் ஆட்டம் குறித்து வல்லுநர்கள் உரையாடி வருகின்றனர். இந்த தருணத்தில் நாமும் சில நிகழ்வுகளை உற்று நோக்குவது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் பலர் இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்து என்றால் நிச்சயம் மிகையாகாது. தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் – இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. இந்த ஜோடி இந்தாண்டு தொடக்கத்தில் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்தது. அப்போது இந்த ஜோடிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. குறிப்பாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் பெரிய அளவில் ரன் ஏதும் சேர்க்கவில்லை. இதனால் கேப்டன் கோலி 5வது போட்டியில் தொடக்க வீரராக களத்தில் குதித்திருந்தார்.

எனினும், முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்த ஜோடியின் அசத்தல் ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. இந்த பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக டாஸ் சுண்டப்பட்ட பின்னர் பேசிய கேப்டன் கோலி, “ஐபிஎல் -க்கு முன்பு விஷயங்கள் வித்தியாசமாக இருந்தன. இப்போது கேஎல் ராகுல் (ஐபிஎல்லில் 626 ரன்கள்) நல்ல பார்மில் உள்ளார். எனவே, நான் 3வது வீரராக பேட்டிங் செய்வேன், ”என்று கோலி கூறினார். இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் ரோகித் சர்மா விளையாடவில்லை என்றாலும் அவரது இடத்தை நிரப்பும் அளவிற்கு ராகுல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

புரியாத புதிர்

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த மேட்ச் பினிஷர் என வர்ணிக்கப்படும் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்டிக் பாண்டியா நேற்றைய பயிற்சி ஆட்டத்திலும் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இதற்கு பலரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், ‘எதற்காக அக்சர் படேலுக்காக ஷர்துல் தாக்கூரை ஆல்ரவுண்டர் வீரர் என அணியில் சேர்த்தீர்கள்’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேபோல் நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ரன்களை வாரிக்கொடுத்தார். அவருக்கு மாற்றாக பந்து வீச அணியில் 6வது பந்து வீச்சாளர் இல்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்தர ஜடேஜா அல்லது ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பந்துவீச்சு எப்படி இருந்தது?

நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 54 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 8 ரன்களை மட்டுமே வழங்கி இருந்தாலும் அவரது கடைசி ஓவரில் 21 ரன்களை வாரிக்கொடுத்தார். இந்திய அணியில் தரமான ஸ்விங் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், அவரது லென்ந்த் பந்துகளின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் அவரது பந்துகளை பேட்ஸ்மேன்கள் எளிதில் சமாளித்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்க விட வாய்ப்புள்ளது.

புவனேஷ்வர் குமாரை தவிர வேகத்தில் மிரட்டிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அஸ்வின் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் தனது சிறப்பான பந்து வீச்சில் இங்கிலாந்து அணியினருக்கு தொடர் நெருக்கடி கொடுத்தார். இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹர் தனது சுழலில் தொடர் அழுத்தம் கொடுத்து டேவிட் மலானின் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் பந்து வீசிய போதெல்லாம் ஸ்லிப்பில் ஒரு வீரரை நிறுத்தி தொடர் தாக்குதல் நடத்த ஒத்துழைத்தார் கேப்டன் கோலி.

கேப்டன் கோலி ஆட்டம் எப்படி?

கடைசியாக நடந்த 3 டி-20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள கேப்டன் விராட் கோலிக்கு நேற்றைய ஆட்டத்தில் சரியான துவக்கம் கிடைக்கவில்லை. 13 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்திருந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய காட்டயத்தில் உள்ள கேப்டன் கோலி எதிரவரும் போட்டிகளில் அதிரடியாக ரன்களை சேர்த்து அணிக்கு உத்வேகம் அளிப்பார் என நம்பலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil ind vs eng warm up game report

Next Story
சாதிரீதியான விமர்சனம்: கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்!Yuvraj Singh Tamil News: casteist remark, yuvraj arrested, released on bail over
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com