Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 4வது மற்றும் தொடரின் இறுதிப்போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் 6 விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 118 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து அதிரடி காட்டி இருந்தார். எனவே அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் ரிஷப் பந்த்தின் ஆட்டம் சேவாக்கின் லெஃப்ட் ஹேன்ட் வெர்ஷன்னை பார்ப்பது போல் உள்ளது'என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் ரிஷப் பந்த்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"ரிஷாப் பந்த், முற்றிலும் புத்திசாலிதனமாக விளையாடியுள்ளார். அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ள போது, மிகச்சிறப்பாக ஆடும் ஒரு வீரரை நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கிறேன். அவர் களமிறங்கிய போது 6 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அவர் அந்த இன்னிங்ஸைத் தொடங்கியதை போன்று யாரும் இதுவரை செய்யவில்லை. ஆடுகளத்தைப் பொருட்படுத்தாமலும், எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் என்பதைப் பொருட்படுத்தாமலும் நிதானமாக ஆடினார். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் எளிதாக சமாளித்தார். அவரின் ஆட்டத்தை நான் மிகவும் ரசித்தேன். மற்றும் அவர் ஆடியது சேவாக்கின் லெஃப்ட் ஹேன்ட் வெர்ஷன்னை பார்ப்பது போல் இருந்தது"என்று இன்சமாம் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டில் இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது சேவாகின் பார்ம் உச்சத்தில் இருந்தது. முல்தானில் நடைபெற்ற போட்டியில் 309 ரன்களை சேர்த்திருந்தார். சேவாகின் பேட்டிங் பாணியிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்ட இன்சமாம், சேவாக் -பந்த் இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
"நான் சேவாக் உடன் விளையாடியுள்ளேன், அவரும் பந்தை போல் ஆடுகளம் மற்றும் மற்ற காரணிகளைப் பற்றி கவலைப்படவே மாட்டார். அவர் பேட்டிங் செய்யும் போது, ஆடுகளம் எவ்வாறு நடந்துகொண்டது அல்லது எதிரணி எந்த வகையான பந்துவீச்சு தாக்குதலை நடத்த உள்ளது என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. பீல்டிங் செய்பபவர்கள் பவுண்டரி எல்லையில் இருந்தாலும், அவர் தன்னுடைய ஆட்டத்தையே ஆடுவார். சேவாகிற்குப் பிறகு, அத்தகைய வீரரை நான் இப்போது தான் பார்த்திருக்கிறேன் "என்று இன்சமாம் கூறினார்.
இன்சமாம் கூறுவது போல பந்த் ஒரு அரிய கிரிக்கெட் வீரர். ஏனெனில் அவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மற்றும் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சில பெரிய வீரர்களை விட இது சிறந்தது.
"பந்த் இந்தியாவில் மட்டும் சிறப்பாக ஆடவில்லை, மாறாக ஆஸ்திரேலியாவிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். அங்கு அவர் தன்னுடைய விருப்பம் போல் விளையாடியதால் அவரால் சதம் அடிக்க இயலவில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு சிறந்த வீரரை நான் பார்க்கிறேன். முன்னர் இந்தியாவில் சச்சின், டிராவிட் இருந்தனர். இப்போது விராட் மற்றும் ரோஹித் உள்ளனர். ஆனால் பந்த் விளையாடும் விதம் மட்டும் எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. அவரிடம் உள்ள தன்னம்பிக்கை உண்மையிலே எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒரு வீரரை நான் இதுவரை சந்தித்தது இல்லை" என்று இன்சமாம் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil