Mohammed Siraj Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் இளம் வீரர் முகமது சிராஜ்(28). கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்து இவர், 15 டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும், 19 ஒருநாள் 33 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்து இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, திருவனந்தபுரம் மண்ணில் நடந்த கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் இலங்கையின் டாப் ஆடரை கதிகலங்க செய்தார். மேலும், ஆரம்ப ஓவர்களில் இந்தியாவுக்கு தேவையான அந்த ‘தொடக்க ஓவர்களில் விக்கெட்’-டை எடுத்துக்கொடுத்து அசத்தினார்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா இலங்கை அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளியது. இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 116 ரன்களும், ரோகித் சர்மா 42 ரன்களும் எடுத்தனர். தனது மிகச் சிறப்பான ஆட்டத்தால் மிரட்டி எடுத்த விராட் கோலி சதம் விளாசி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டானார்.
இந்திய வீரர்கள் மொத்தமாக 14 சிக்ஸர்களை பறக்க விட்டும், 32 பவுண்டரிகளை விரட்டியும் இருந்தனர். இதனால், பந்துவீச்சு தாக்குதல் தொடுத்த இலங்கை வீரர்கள் துவண்டு போனார்கள் என்றே கூறலாம். இதேபோல், 391 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய அந்த அணி அணியினர் இந்தியாவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அங்கு நடந்த கதை வேறாக இருந்தது. முதல் ஓவரை சமி வீச, 2வது ஓவரை வீசிய சிராஜ் லைன் மற்றும் லென்த்தில் மிரட்டினார். அவர் வீசிய பந்துகள் பேட்ஸ்மேனின் ஆஃப் ஸ்டம்புக்கு அருகில் அருகில் சென்றது. 5வது பந்தில் அவிஷ்க பெர்னாண்டோ சுப்மான் கில் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். குசல் மெண்டிஸ் கீப்பர் ராகுல் வசம் எட்ச் விட்டு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து சரமாரியான வேகத் தாக்குதல் நடத்திய சிராஜ் தான் நினைத்த அந்தப் பந்துகளை வீசி கொண்டிருந்தார். அவரின் அசத்தலான அந்த பந்துக்கு நுவனிது பெர்னாண்டோ இன்சைடு எட்ச் ஆகி அவுட் ஆனார். எனினும், வனிந்து ஹசரங்கவுக்கு வீசப்பட்ட பந்து அவருக்கு பின்புறம் இருந்த ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. அப்போது அங்கு என்ன நடந்தது என்பதை அறியாதவராய் ஹசரங்க நின்றார். அந்த அளவிற்கு சிராஜ் வீசிய பந்து துல்லியமாக சென்று போல்ட்டை தாக்கியது.
சிராஜ் வீசிய 12 வது ஓவரில் அவரது பந்தை சந்தித்த சாமிக்க கருணாரத்ன 4வது பந்தை தட்டி சிராஜ் வசம் கொடுக்க, அதை கையில் எடுத்த அவர் கிரீஸை விட்டு நூலளவில் வெளியிருந்த கருணாரத்ன வை ரன் அவுட் செய்தார். இந்த ரன்அவுட் மற்றும் பந்துவீச்சில் 32 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் சிராஜ். மேலும், தொடரில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார்.
இந்தப்போட்டிக்கு பிறகான பேட்டியில் பேசிய சிராஜ், “புதிய பந்தில் முடிந்தவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை அழுத்தத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதே எனது திட்டம். நான் பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு பின்னடைவை கொடுக்க விரும்பினேன்.” என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் பவர்பிளேயில் ஒரு சர்வதேச பந்துவீச்சாளருக்காக அதிக விக்கெட்டுகளை (15) கைப்பற்றிய வீரராகவும் சிராஜ் இருக்கிறார். அதற்காக, அவர் உருவாக்கிய திட்டம் தான் வேபுல்-சீம் (wobble seam) டெலிவரி. “தடுமாற்றத்துடன், பந்து எவ்வளவு நகர்கிறது என்பது எனக்குத் தெரியாது அல்லது பேட்ஸ்மேன்களுக்குத் தெரியாது. சில நேரங்களில், பந்து அதன்லென்த்தைப் பிடிக்கலாம், சில சமயங்களில் அது பேட்ஸ்மேனுக்குள் ஊடுருவுகிறது. நான் வேபுல்-சீம் மூலம் நிறைய விக்கெட்டுகளை எடுக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, அது பயனுள்ளதாக இருக்கிறது. நான் அதில் வெற்றியைப் பெற்றுள்ளேன், மேலும் அது போன்ற வேபுல்-சீம் பந்தை நம்பியிருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
அவ்வகையில், சிராஜ் குறிப்பிடும் வேபுல்-சீம் பந்து என்றால் என்ன? அது எப்படி வீசப்படுகிறது? ? அதை அறிமுகம் செய்தவர் வீரர் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
வேபுல்-சீம் பந்து என்றால் என்ன?

ஒரு வேகப்பந்து வீச்சாளர் அத்தகைய பந்து வீச்சை வீசும்போது, பந்து சற்று தள்ளாடி ஆனால் நேராக பேட்ஸ்மேனை நோக்கி செல்லும்.
பந்து வீச்சாளர் தனது முதுகை வளைத்து டெக்கில் பலமாக அடித்து வீசும்போது, வேபுல்-சீம் பந்து வீச்சு எதிர்பாராதவிதமாக ஆடுகளத்தை விட்டும் விலகும்.
இத்தகைய நுணுக்கமான பந்துவீச்சை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது ஆசிப்பை நெருக்கமாகப் பார்த்து உருவாக்கிய பெருமைக்குரியவர்.
இந்த பந்தின் டெலிவரியானது ஒரு வழக்கமான சீமரின் பந்து வீச்சுக்கு போல் பந்தைப் பிடித்து, மோதிரமும் நடுவிரலும் மடிப்புக்கு இருபுறமும் இருக்கும், ஆனால், அதிகமாகத் தெரியும்படி மிகவும் அகலமாக இருக்கும்.
மணிக்கட்டு ‘லாக்’ செய்யப்பட்டிருப்பதால், வழக்கமான பந்து வீச்சைப் போல் கைக்கு வெளியே ‘தள்ளப்படாமல்’ பந்து எப்படி வெளியிடப்படுகிறது என்பதில் தந்திரம் உள்ளது, அது பந்து தள்ளாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
சிராஜ் போன்ற பல சிறந்த சர்வதேச பந்துவீச்சாளர்கள் இப்போது தங்களுக்கே உரித்தான வேபுல்-சீம் பந்து வீச்சை கொண்டுள்ளனர். இதனால், பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாடுவதில் அதிக சிரமம் ஏற்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“