Cricket Tamil News: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், நேற்று கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் முதல் போட்டியை எளிதில் வென்ற இந்திய அணி 2வது போட்டியில் சற்று தடுமாறியது என்றே கூறலாம். வெற்றி இலக்கை 276 ரன்களாக இலங்கை அணி நிர்ணயித்த நிலையில், அதை துரத்த உத்வேகத்துடன் களம் கண்ட இந்திய அணி முதல் 12 ஓவர்களில் அதன் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கரையில் இருந்த நகர்ந்த கப்பலுக்கு ஏற்படும் தடுமாற்றம் போல் துவக்கத்திலேயே விக்கெட்டை இழந்த இந்திய அணியை தங்களது நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினர் மனிஷ் பாண்டே – சூர்யகுமார் யாதவ் ஜோடி. இந்த ஜோடியில் தனது முதல் ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்திருந்தார் சூர்யகுமார் யாதவ்.

இருப்பினும் இந்த ஜோடி ஆட்டமிழந்து வெளியேறவே மீண்டும் நடுக்கடலில் அல்லாடியது இந்திய அணி. ஆனால் தனது நிதானம் மற்றும் நுணுக்கம் கலந்த ஆட்டத்தால் தத்தளித்த கப்பலை கரை சேர்த்தார் தீபக் சஹார். எனவே, மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் வெற்றியை எட்ட உதவிய தீபக் சஹாரை ரசிகர்கள் தங்கள் வாழ்த்து மழையால் நனைத்தனர். மேலும் இந்த போட்டி குறித்து உலகின் முன்னணி வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் சூர்யகுமார் யாதவ் குறித்து கூறுகையில், “இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது சூர்யகுமார் விளையாடிய விதம், அவரது ஆட்டத்திறன் ஆகியவற்றில் உள்ள முதிர்ச்சி அதிகம் தென்பட்டது.

அவர் விளையாடிய விதத்தை பார்த்தால் 70 – 80 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் போல் நுணுக்கமாக விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவருடைய அனுபவம்தான் இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாட கை கொடுத்தது” என்று கூறுயுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“