ச. மார்ட்டின் ஜெயராஜ்.
KL Rahul Tamil News: இந்திய அணியில் மிடில்-ஆடரில் அறிமுகமாகி பின் தொடக்க வீரராக ப்ரோமோஷன் கண்ட பல வீரர்கள் உள்ளனர். அதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை குறிப்பிடலாம். அவ்வகையில், மிடில்-ஆடரில் அறிமுகமான கே.எல் ராகுலுக்கு தொடக்க வீரர் என்ற அந்தஸ்து 3 வடிவ கிரிக்கெட்டிலும் வழங்கப்பட்டது. ஆனால், அவரது நிலைத்து நின்று ஆடும் தன்மை குறைவு, ரன் சேர்க்க திணறல், ஷாட் தேர்வு போன்றவை அவரை ஃபார்ம் அவுட் வீரர் ஆக்கியது.
கடந்த ஆண்டில், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ராகுல், அதன்பிறகு தனது பாணியில் ஆட ரொம்பவே சிரமப்பட்டார். தென்ஆப்பிரிக்க மண்ணில் நடத்த டெஸ்ட் தொடரில் கேப்டனாக வழிநடத்திய அவர், அந்தத் தொடரில் சோபிக்க தவறினார். இதேபோல் வங்கதேச மண்ணிலும் ரன்கள் சேர்க்க போராடினார். எனினும், அணி நிர்வாகம் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுத்தது.

இதனிடையே, சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்திருந்தார். இதனால், பலரும் ‘அந்த இளம் வீரருக்கு டெஸ்ட் தொடரிலும் தொடக்க வீரர் வாய்ப்பு கொடுங்கள்’ என்று ஆதரவுக் குரல் எழுப்பினார். இது ஏற்கனவே அவுட் ஆஃப் ஃபார்மில் நலிவடைந்த ராகுலுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் சந்திக்க இருந்த ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா? ஆட்டமாக இருந்தது. அவர் தனது இக்கட்டான கட்டத்தை கடந்து மீண்டு வருவார் என்றும், இதுபோன்ற கட்டத்தை பல வீரர்களும் கடந்துள்ளனர் என்வும் பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால், நாக்பூர் களத்தில் நடந்தது வேறு கதையாக இருந்தது. ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 20 ரன்னுடன் நடையைக் கட்டினார். டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட்டில், 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 18 ரன் தான் எடுத்தார். இதனால், பலரும் அவர் மீது கோப நெருப்பைக் கக்கினர். வெளியில் இருந்து வரும் சத்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் செவிமடுப்பதில்லை என்று கூறிய கேப்டன் ரோகித் ராகுலை 3வது போட்டியில் இருந்து கழற்றி விட்டார். ராகுலின் துணை கேப்டன் பொறுப்பு குறித்து கேப்டன் ரோகித் தான் முடிவு செய்வார் என்று ரோகித்தை கை காட்டி விட்டு அணி தேர்வுக்குழு ஒதுங்கிக்கொண்டது.

3வது போட்டியில் ராகுலின் இடத்தில் இறங்கிய சுப்மன் கில் 2 இன்னிங்ஸ்களில் 26 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் அடியும் வாங்கியது. ஆனால் 4வது போட்டியில், கொடுக்கப்பட்ட வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள சுப்மன் கில் விஸ்வரூபம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதை அப்படியே செய்தும் முடித்தார். 235 பத்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என அடித்து நொறுக்கிய கில் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவரது அதிரடி ராகுலுக்கு பெரும் இடியாக இறங்கியது. இந்தப் போட்டியை டிரா செய்த இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இப்போட்டி வருகிற ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
இது ஒருபுறமிருக்க, டி,20 – ஒருநாள் போட்டி என இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் தனது இடத்தை இழந்த ராகுல் டெஸ்ட் போட்டியிலும் சரிவைக் கண்டு வருகிறார். ஆனால், அதள பாதாளத்தை நோக்கி பயணித்த அவரை கை கொடுத்து தூக்கும் விதமாக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் காயமும், டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த கே.எஸ் பாரத்-தின் மந்தமான செயல்பாடும் வந்துள்ளது. நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 4 போட்டியிலும் விக்கெட் கீப்பராக செயல்பட்ட பாரத், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் லாபுசாக்னேவை அற்புதமான ஸ்டம்பிங் செய்து தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

எனினும், 4 போட்டிகளிலும் தனது திறனை நிரூபிக்க அருமை அருமையான வாய்ப்புகள் கிடைத்தும் அதை கோட்டை விட்டார். 4 போட்டியிலும் சேர்த்து 20.2 சராசரியில் 101 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. கூடவே, 4வது போட்டியில் டிராவிஸ் ஹெட் கொடுத்து ஈசி கேட்ச்சை நழுவ விட்டு ஏச்சு, பேச்சுக்கு ஆளாகினார் பாரத். பந்தை ஓட்டை விட்டாலே முகம் சுளிக்கும் ரோகித் கேட்ச் விட்டால் சும்மா இருப்பாரா. உடனடி ரீ-ஆக்சனை கொடுக்கவும் செய்தார். எனவே, சொந்த மண்ணில் நடக்கும் தொடரிலே இப்படி தடுமாறும் வீரரோடு எப்படி இங்கிலாந்து செல்ல முடியும் என்று நிச்சயம் அவர் யோசிப்பார்.
இப்போது ராகுலின் தொடக்க வீரர் இடத்தை கில் கைப்பற்றி இருந்தாலும், மிடில்-ஆடரில் இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. ‘அவர் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் வீரர்’ என்பது ராகுலுக்கு கிடைத்த கூடுதல் பலமாக இருக்கிறது. எனவே, அவரை இந்திய அணி நிர்வாகம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கீப்பர்-பேட்டராக விளையாட பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டு இருந்தார். அவர் பரிந்துரையை ஒருபுறம் தள்ளி வைத்தாலும், இங்கு இந்திய அணிக்கும் ‘வேறு வழியில்லை’ என்றே நம்மால் பார்க்க முடிகிறது. ஏனென்றால், ராகுல் விளாசியுள்ள 7 டெஸ்ட் சதங்களில் 6 சதம் அயல்நாட்டு மண்ணில் விளாசப்பட்டவை. ஒரு ஒரே சதம் மட்டும் தான் இந்தியாவில் அடித்துள்ளார், அதுவும் சென்னையில்.

இந்த 6 சதங்களில் 2 சதங்கள் இங்கிலாந்து மண்ணில் அடிக்கப்பட்டவை. 2021ல் பிரபலமான லார்ட்ஸ் மைதானத்தில் ராகுல் சதம் விளாசி 127 ரன்கள் எடுத்தார். இதேபோல், 2023 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் ஓவல் மைதானத்தில் 2018ல் நடந்த போட்டியில் ராகுல் 149 ரன்கள் எடுத்து அசத்தினார். எனவே, அவரை இந்திய அணி நிர்வாகம் நிச்சயம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னோட்டமாக, அவர் களமாட உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐ.பி.எல் 2023 தொடர் இருக்கும்.

ராகுல் குறித்து நேற்று புதன்கிழமை பேசிய இந்திய பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்,“கே.எல்.ராகுல் ஒரு அற்புதமான வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிடில் ஆர்டரில் ஒருநாள் போட்டிகளில் அவர் தன்னை நிரூபிக்கும் வகையில் சாதனை படைத்துள்ளார். அவர் அணிக்கு நிறைய சமநிலையை கொண்டு வருகிறார். மேலும், அவர் இப்போது விக்கெட் கீப்பராக செயல்படும் வீரர் அல்ல. சிறு வயதிலிருந்தே அதை செய்து வருகிறார். எனவே, ஒரு சில அம்சங்களைச் செம்மைப்படுத்துவதைத் தவிர, அவரது விக்கெட் கீப்பிங் திறன்களில் பணியாற்றுவது மிகவும் கடினம் அல்ல.” என்று கூறியிருந்தார்.
பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கூறுவதைப் போல் இந்திய அணிக்கு மிடில் -ஆடரில் சூரியகுமார் யாதவை போல் ஒரு வீரர் நிச்சயம் தேவை. அதற்கு பொருத்தமான வீராக ராகுல் இருப்பார். ஏனெனில், சமீபத்தில் இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், கொல்கத்தா மண்ணில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 215 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தியது. அந்த ஆட்டத்தில் இந்திய டாப் ஆடர் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், மிடில் ஆடரில் களமிறங்கி நங்கூரம் போட்ட ராகுல் இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவி இருந்தார். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அத்தகைய ஆட்டத்தை ராகுல் வெளிப்படுத்துவார் என்று நம்புவோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil