ச.மார்ட்டின் ஜெயராஜ்
IND-AUS ODI Series Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய மண்ணில் நடந்து வருகிறது. நேற்று முனத்தினம் (வெள்ளிக்கிழமை) மும்பையில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீசிய இந்தியா ஆஸ்திரேலியாவை தொடக்க முதலே மடக்க நினைத்தது. ஆனாலும், அலர்ட்டாக இருந்த மிட்சல் மார்ஷ் அதிரடி காட்டி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு குடைச்சல் கொடுத்தார். 81 ரன்கள் வரை எடுத்த அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரக்கள் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்தியாவின் ஷமியும், சிராஜும் மாறி மாறி விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 35.4 ஓவரிலே அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்த ஆஸ்திரேலியா 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதே மைதானத்தில் கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்ரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 438 ரன்கள் குவித்து அசத்தி இருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் (109 ரன்), ஃபாஃப் டு பிளெசிஸ் (133 ரன்), ஏபி டி வில்லியர்ஸ் (119 ரன், 11 சிக்ஸர் உட்பட) போன்ற வீரர்கள் சதம் விளாசி மிரட்டி இருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய அணியோ ரன் குவிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டது.

தொடர்ந்து 189 ரன்கள் கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்திய ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் வேகத்தில் அதிர்வு கண்டது. குறிப்பாக, ஸ்டார்க் வீசிய பந்துகள் இந்திய டாப் ஆடரை ஆட்டம் காண செய்தது. அவர் தனது வேகத் தாக்குதலில் இந்தியாவின் முன்னணி மற்றும் அதிரடி வீரர்களான சுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரை சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வைத்து, பெவிலியனுக்கு நடையைக் கட்ட செய்தார். எனினும், களத்தில் இருந்த கேஎல் ராகுல் நடுக்கடலில் தத்தளித்து தடுமாறிய கப்பலை கரை சேர்த்தார். அவருடன் ஜோடியில் இருந்த பாண்டியா மற்றும் ஜடேஜா தங்களது பங்கிற்கு, கயிறுகளை கரை நோக்கி வீச உதவினர். ஒருவழியாய் 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புடன் இலக்கையும் எட்டிப்பிடித்து கரையேறினர். இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்தியாவில் பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், இளம் வீரர்களான இஷான் கிஷன், சுப்மன் கில் மாற்றம் கேஎல் ராகுல் போன்றோர் தான் உள்ளனர். இவர்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது மைதானத்திற்கு தகுந்தபடியோ அல்லது எதிரணி பந்துவீச்சுக்கு தகுந்தபடியோ ஒரு பேட்ஸ்மேனை கூட மாற்றும் சூழல் அணியில் இல்லை. மொத்தமாக அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் ஆட வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது.
2வது போட்டியில் கேப்டன் ரோகித் இணைந்தால் இஷான் கிஷன் மட்டுமே பெஞ்சில் இருப்பபார். அவரைத் தவிர பெஞ்சில் இருக்கும் எந்த வீரரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் இல்லை. மேலும், டாப் ஆடரில் இருக்கும் வீரர்களுக்கு மாற்று வீரர்களாகவோ அல்லது பேக்-அப் வீரராகவோ யாருமே இல்லை. இதற்கு முக்கிய காரணம் ஒரு ‘எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்’ கூட அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. பிளேயிங் லெவலை தாண்டி பார்த்தால் வெளியே பெஞ்சில் இருக்கிற அனைவருமே பந்துவீச்சாளர்கள் தான். வாஷிங்டன் சுந்தர் மட்டும் பந்துவீச்சு ஆல் ரவுண்டர். இதனால் தான் இங்கே ‘இந்தியாவில் பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டிய அவசியம் எழுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கவிருக்கிறது. அதுவும் இந்திய மண்ணில் நடக்கிறது. இப்படியான சூழலில் இந்தியா ஒரு வலுவான ஒருநாள் அணியை கட்டமைப்பதில் இருந்தும், தரமான பேட்டிங் வரிசையை தெரிவு செய்வதில் இருந்தும் சறுக்கி வருகிறது. இது இந்திய அணி நிர்வாகத்தின் மீது பல கேள்விகளை எழுப்பவும், கடுமையான விமர்சனங்களை அடுக்கவும் வழி செய்கிறது. அதனால், அதிரடியாக மட்டைச் சுழற்றும் வீரர்களுடன், ராகுல் போன்று சாதுரியமாகவும் பேட்டிங் செய்யும் வீரர்கள் தான் அணிக்கு தேவை. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து பிசிசிஐ-யின் தேர்வுக்குழு சரியான வீரர்களை தேர்வு செய்யுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil