Cricket Tamil News: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் கடந்த 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் வந்த தென்ஆப்பிரிக்கா அணி 197 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது 2வது இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்த்து ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்ட் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை கேட்ச் செய்தார். இதன் மூலம், ‘கீப்பிங்கில் 100 அவுட்’ என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் (26 டெஸ்ட்) என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 93 கேட்ச், 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இதற்கு முன்பு, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்திய விக்கெட் கீப்பரின் அதிவேகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
A century of dismissals for @RishabhPant17 from behind the stumps in whites👏👏
He becomes the fastest Indian wicket-keeper to achieve this feat.#SAvIND pic.twitter.com/6pHpfnLDO1— BCCI (@BCCI) December 28, 2021
இப்போது, இதே சாதனையை படைத்த இந்திய வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
கீப்பிங்கில் 100 அவுட் - இந்திய வீரர்களின் பட்டியல்:
சையத் கிர்மானி
1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தவர் இந்திய விக்கெட் கீப்பர் வீரர் சையத் கிர்மானி. கீப்பிங்கில் 100 அவுட் என்ற மைல்கல்லை அவர் 42 டெஸ்ட் போட்டிகளில் எட்டி இருந்தார்.
சையத் கிர்மானி ஒரு விக்கெட் கீப்பராக மொத்தம் 198 ஆட்டமிழப்புகளை செய்திருக்கிறார். இதில் 160 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.
கிரண் மோர்
மற்றொரு அற்புதமான இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோர் ஆவார். பிசிசிஐ-யின் தேர்வுக்குழு தலைவராக இருந்த இவர், முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியை அதிகம் முன்னிறுத்தியவர்.
கிரண் மோர், கீப்பிங்கில் 100 அவுட் என்ற மைல்கல்லை தனது 39வது டெஸ்ட் போட்டியில் எட்டினார். மேலும், 110 கேட்சுகள் மற்றும் 20 ஸ்டம்பிங்குகள் உட்பட அவர் 130 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார்.
நயன் மோங்கியா
ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லைகொடுப்பதில் நயன் மோங்கியா பிரபலமானவர். அதேசமயம், பந்துவீச்சாளர்களிடம் சாதுரியமாக பேசி பந்து வீச செய்யும் கெட்டிக்காரர்.
நயன் மோங்கியா இதுவரை 99 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்பிங்கள் உட்பட 107 ஆட்டமிழப்புகளை செய்திருக்கிறார். கீப்பிங்கில் 100 அவுட் என்ற மைல்கல்லை அவரது 41வது டெஸ்டில் எட்டினார்.
எம் எஸ் தோனி
விக்கெட் கீப்பிங்கில் மிகப்பெரிய சாதனையை ஒரு கேப்டனாக இருந்து படைத்த பெருமையை இந்திய விக்கெட் கீப்பர் வீரர் எம் எஸ் தோனியைத் தான் சாரும். 538 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 829 ஆட்டமிழப்புகளை செய்திருக்கிறார். அதில் 634 கேட்சுகள் 195 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை தோனி இதுவரை 294 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார். இதில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங்குகள் அடங்கும். அவர் கீப்பிங்கில் 100 அவுட் என்ற மைல்கல்லை தனது 36வது டெஸ்டில் எட்டினார்.
விருத்திமான் சாஹா
பட்டியலில் மற்றொரு சிறந்த இந்திய விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா உள்ளார். நாம் முன்னர் குறிப்பிட்டது போல இந்த கீப்பிங்கில் 100 அவுட் என்ற மைல்கல்லை இவரும் தனது 36வது டெஸ்டில் எட்டினார்.
ஸ்டம்புகளுக்குப் பின்னால் குறைந்த தவறுகளே செய்யும் இவர், இதுவரை 92 கேட்சுகள் மற்றும் 12 ஸ்டம்பிக்குகள் உட்பட மொத்தம் 104 பேரை விக்கெட்டுக்கு பின்னால் இருந்து வீழ்த்தியுள்ளார். இந்த எண்ணிக்கை அவர் விளையாடும் வரை அதிகரிக்கும்.
ரிஷாப் பண்ட்
இந்த பட்டியலில் சமீபத்தில் இணைத்துள்ள வீரராகவும், அனைவரது சாதனையையும் முறியடித்த வீரராகவும் வலம் வருகிறார் இளம் இந்திய விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்ட். டெஸ்ட்டில் நிலையான இடத்தை தக்கவைத்துள்ள அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.