scorecardresearch

நெருக்கடியில் இந்திய அணி: அகமதாபாத் டெஸ்டில் 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குமா?

அகமதாபாத் போன்ற ஆடுகளங்களில் ‘சைனா மேன்’ பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசுவார். தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் சாய்ப்பார்.

Cricket, Will India play with 4th spinner in Ahmedabad Test?
India vs Australia, 4th Test Ahmedabad, Will India include Kuldeep Yadav? Tamil News

IND vs AUS 4th Test Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த புதன்கிழமை (மார்ச் 1ம் தேதி) தொடங்கி நடந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது. மேலும், ஆஸ்திரேலிய அணி இந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

நெருக்கடி கொடுக்கும் இலங்கை இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக தகுதி பெற்ற நிலையில், 2வது இடத்தை பிடிக்க போகும் அணிக்கு இந்தியா – இலங்கை அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தரவரிசையில் 68.52 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 60.29 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தில் இலங்கை அணி இருக்கிறது.

வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவலில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தற்போதைய டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வீழ்த்த வேண்டும். ஆனால், இந்தியா முன்னேற, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால், நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்தியாவின் வாய்ப்பு அமையும். அதாவது, இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்று வெற்றி பெற்றால் கூட, இந்தியா அகமதாபாத் டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.

4வது டெஸ்டில் இந்தியா டிரா செய்தலும் கூட தகுதி பெற வாய்ப்புள்ளது. எனினும் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றாலும், நியூசிலாந்தை வீழ்த்தினால் இலங்கையால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்பதால் அது இன்னும் போதாது. எனவே, இந்தியா அகமதாபாத் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இலங்கை அணி நியூசிலாந்தில் 2-0 என்று வெற்றி பெறவில்லை என்றால், இந்தியா அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றாலும் வெல்லா விட்டாலும் தகுதி பெற்று விடும்.

மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியும் மார்ச் 9ம் தேதிதான் தொடங்குகின்றன. எனவே, இந்த இரு போட்டிகளின் முடிவுகளுக்கவும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பார்கள்.

அகமதாபாத் டெஸ்டில் 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குமா?

இந்தூரின் கருப்பு – சிவப்பு மண் களத்தில் விளையாடிய இந்தியா ஆடுகளத்தை தவறாக கணித்து பேட்டிங் செய்தது. லியோன் மற்றும் குஹ்னேமன் விரித்த சுழல் வலையில் இந்திய டாப் ஆடர் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தது. 59 ரன்கள் எடுத்த புஜாரா ஆறுதல் கொடுத்தார். ஆனால், 2வது இன்னிங்சில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். முதல் நாள் தொடக்கத்திலே கூர்மையான திருப்பம் மற்றும் பவுன்ஸ் வழங்கும் ஆடுகளத்தில் சண்டையிடுவதற்குப் பதிலாக, பந்துவீச்சாளர்கள் சுழல் எனும் மாயவலையில் சிக்கி வெளியேறினர். இந்தியாவின் ஒரு வீரரின் பேட்டிங் கூட மெச்சும்படியாக இல்லை.

இந்தியா வீசிய 105.2 ஓவர்களில் முகமது சிராஜ் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். அவருக்குப் பதிலாக கூடுதல் பேட்டருடன் இந்தியா சென்றிருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இதேபோல், ஆல்ரவுண்டர் வீரரான அக்சர் படேலின் பங்கு குறித்தும் தெளிவு இல்லை. அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கிய போது 4 போட்டிகளில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருந்தார். ஆனால் இந்தத் தொடரில் அவரை ஒரு பகுதி நேர பந்துவீச்சாளராக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜாவின் 106.1 ஓவர்கள் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 95.1 ஓவர்களுடன் ஒப்பிடும்போது, ​​அக்சர் மிகவும் சிக்கனமாகவே பயன்படுத்தப்பட்டார், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெறும் 39 ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தார். 9வது இடத்தில் பேட் செய்யும் அக்சர், கடினமான ஆடுகளங்களில் பேட்டிங்கை நீட்டிக்க அணியில் முக்கியமாக வைக்கப்பட்டாரா என்பதும், அஷ்வினைப் போல் கேப்டன் அவர் பந்துவீசுவதை நம்பவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

4வது போட்டி நடக்கும் அகமதாபாத் ஆடுகளத்தைப் பொறுத்தவரை, இந்தியா மற்றொரு ஸ்பின்னிங் டிராக்கை உருவாக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை கேப்டன் ரோகித் சர்மா தனது பேட்டியில் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருந்தார். எனவே, இந்திய அணி புத்துயிர் பெற அணியில் சில மாற்றங்களைச் செய்யலாம். குறிப்பாக, சுழற்பந்துவீச்சு வரிசையில் ஒரு மாற்றம் இருக்கலாம். ஏனென்றால், இது போன்ற ஆடுகளங்களில் ‘சைனா மேன்’ பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசுவார். தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் சாய்ப்பார்.

ஆனால், இந்தியா நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க வாய்ப்பில்லை என்பதால் அவர் பெரும்பாலும் அக்சருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படலாம். இந்தூர் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தொடக்கத்திலிருந்தே ஆடுகளம் மாறத் தொடங்கினால் இந்தியாவுக்கு உண்மையில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை ஏற்படும். எனினும், ஷமி அணியில் இடம் பிடிப்பது உறுதி தான்.

கே.எல். ராகுல் vs ஷுப்மான் கில் விவாதம் 3வது டெஸ்டுக்கு முன்பு வரை தீயாய் கொழுந்து விட்டு எரிந்த நிலையில், தற்போது அதன் தடம் கூட தெரியவில்லை. உண்மையில், ராகுல் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கிறார் என்று கதறியவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளல் வேண்டும். அது, அவர் மட்டுமல்ல மொத்த அணியும் ஃபார்ம் அவுட்டில் தான் உள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் இந்தியாவின் டாப் ஆடர் வீரர்கள் ஒருவர் கூட தங்களின் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. போட்டி சொந்த மண்ணில் நடக்கும் போது, ஒரு இந்திய வீரரால் கூட ஒருநாள் முழுதுமாக களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதில் கேப்டன் ரோகித் ‘இந்தியாவில் உள்ள ஆடுகளங்களைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம்.’ என்கிறார். அணியில் ஒரு வீரர் கூட சிறப்பாக விளையாடாத போது, அனைவரின் கவனமும் மாறும் என்பது கூட தெரியாத கேப்டன் இருக்கிறாரே என பலரும் வசைபாடுகின்றனர்.

எனவே, இந்திய பேட்டிங் வரிசைக்கு உயிர் கொடுப்பது கேப்டனாக அவரின் முதன்மையான கடமை. ஆதலால், தனது வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்ட ஷுப்மான் கில்லுக்குப் பதிலாக அவர்கள் சூர்யகுமார் யாதவ் அல்லது கே எல் ராகுல் ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்க்கலாம். மேலும், இரண்டாவது வேகப்பந்து வீச்சாளருக்கு பதில் ஒரு கூடுதல் பேட்டரை மாற்றுவதன் மூலமும் இந்தியா அதன் இழப்பை மீட்டெடுக்கலாம். இதில் எப்படியான முடிவை நோக்கி அணி நிர்வாகம் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்தியாவின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்:

ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல்/சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket will india play with 4th spinner in ahmedabad test