ICC Cricket World Cup 2019: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 நாளை (மே.30) தொடங்குகிறது. ஒவ்வொரு அணியும், பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என்று ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொள்ளும் வகையில் திட்டங்கள் வைத்துள்ளன. ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் விராட் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணியும், ஒவ்வொரு எதிராளிக்கு எதிராகவும் திட்டங்கள் வகுத்துள்ளது. அத்திட்டங்களின் 'X Factor'-ஆக ஒருவர் பெயர் மட்டுமே அடிபடுகிறது.
ஹர்திக் பாண்ட்யா....
உலகில் எப்பேற்பட்ட மைதானமாக இருந்தாலும், அங்கு Defensive Field அமைக்கப்பட்டு இருந்தாலும் அவற்றை ஓவர்கம் செய்யும் திறன் பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உண்டு.
Express Pace, பிளாப் (Blob - டக் அவுட் செய்வது) செய்வது, பவுன்ஸ், பிரேஸ் (Brace - அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்துவது) இப்படியாக திறமை இல்லாவிட்டாலும், துணிந்து 7 ஓவர்கள் கொடுக்கலாம், வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 97% தன்னைத் தாண்டி பந்து செல்லவும் விட்டதில்லை, கேட்சும் விட்டதில்லை ஃபீல்டர் ஹர்திக் பாண்ட்யா.
சுருக்கமாக, பிசிசிஐ-யின் பாஷையில் சொல்ல வேண்டுமெனில், 3டி டைமன்ஷனில் அணிக்கு வலு சேர்ப்பவராக இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.
உலகக் கோப்பை போன்ற மாபெரும் தொடர்களில், மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது தொடர் எங்கு நடக்கிறது என்பதே. அதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு இங்கு தீர்மானிக்கப்படும். 90'ஸ் கிட்ஸுக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில், 2011 உலகக் கோப்பை நடந்தது இந்தியாவில். ஆசிய கண்டிஷன். அங்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளால் ஆதிக்கமே செலுத்த முடியவில்லை.
இப்போது அதை ரிவர்சில போட்டுக் கொள்ளுங்கள். தொடர் நடப்பது இங்கிலாந்தில். இந்த கண்டிஷனில் பெரும்பாலும் ஆசிய அணிகள் தடுமாறும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியா போன்ற அணிகள் வெல்ல வேண்டுமெனில், எதைப் பற்றியும் கவலைப்படாத, பயப்படாத வீரர்கள் இருக்க வேண்டும். அதற்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.
இவரது அலட்சிய மனோபாவம், டேக் இட் ஈஸி குணம், மல்லுக்கட்டும் மனப்பான்மை, எதிரணியினருடன் லேசான திமிர் கொண்ட உரசல் போன்றவை இவருக்கு சாதகமோ இல்லையோ, நிச்சயம் இந்தியாவுக்கு 2 போட்டியிலாவது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என நம்பலாம். குளிர் நிறைந்த இங்கிலாந்து கண்டிஷனில், சாம்பார் போன்று ஆடினால் நிச்சயம் பருப்பு வேகாது. ஸ்பைசி பெப்பர் சிக்கன் இங்கு தேவைப்படுகிறது.
இவற்றையெல்லாம் தவிர, ஹர்திக் பாண்ட்யாவிடம் இருக்கும் ப்ளஸ் தகவமைத்துக் கொள்ளுதல். இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற எந்த கண்டிஷனாக இருந்தாலும் அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் பக்குவத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. இந்திய வீரர்களில் பெரும்பாலானோருக்கு கிடைக்காத வரம் இது எனலாம். இந்தியாவின் மெகா கிரிக்கெட் வீரர்கள் பக்கெட்டில் இருப்பவர்களில் கூட பலருக்கு இந்த தகவமைத்துக் கொள்ளுதல் என்பது சவாலாகவே இருந்திருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றிப் பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், ஹர்திக் பாண்ட்யா எனும் 'X Factor' ஜொலிக்கப் போவது உறுதி!.