Advertisment

இந்தியாவின் முதல் ஹாட்ரிக் விக்கெட்... சதம் அடித்த வேகப்பந்துவீச்சாளர் : யார் இந்த சேத்தன் சர்மா?

சேத்தன் சர்மா, அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

author-image
D. Elayaraja
New Update
Chetan Sharma

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா

இந்திய அணிக்காக முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சார், ஒருநாள் போட்டிகளில் சதமடித்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சர்மா.

Advertisment

1983-ம் ஆண்டு தனது 17-வயதில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் தர போட்டிகளில் களமிறங்கிய சேத்தன் சர்மா, அடுத்து 1984-ம் ஆண்டு, லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 94 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெஸ்ட் போட்டியின் முக்கிய வீரர்

இந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் பாகிஸ்தான் அணியின், மோஷின் கான் விக்கெட்டை வீழ்த்திய சேத்தன் சர்மா, அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து 1985-ல் இலங்கை அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், அந்த தொடரில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

1986-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில், 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய சேத்தன் சர்மா 16 விக்கெட்டுகள் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். குறிப்பாக பார்மிஹமில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 2-வது இன்னிங்சில் 6 என மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இடம் பிடித்த சேத்தன் சர்மா, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஹால் ஆஃப் ஃபேம் குழுவில் ஒருவராக இடம் பெற்றார். 5 வருடங்கள் மட்டுமே டெஸ்ட் அணியில் விளையாடிய சேத்தன் சர்மா, 1989-ம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபீனா பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் கடைசியாக விளையாடினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 100 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய சேத்தன் சர்மா, பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் 6 ரன்களும், 2-வது இன்னிங்சில் 21 ரன்களும் எடுத்தார்.

ஒருநாள் போட்டியில் சதமடித்த வேகப்பந்துவீச்சாளர்

இந்தியா உலககோப்பை தொடரை வென்ற 1983-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் தொடரில் அறிமுகமான சேத்தன் சர்மா, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் இக்கட்டான சூழலில் பேட்டிங்கிலும் கைகொடுத்த சேத்தன் சர்மா, கபில்தேவ்-க்கு அடுத்து இந்திய அணியின் பவுலிங் ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்பட்டார்.

அடிக்கடி காயங்களில் சிக்கி இருந்தாலும், கபில்தேவ்வுடன் பந்துவீசும் தொடக்க வேகப்பந்துவீச்சாளராக இருந்த சேத்தன் சர்மா, 1989-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக, 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதமடித்து அசத்தினார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 255 ரன்கள் குவித்தது. 256 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனைத் தொடர்ந்து. கேப்டன் ஸ்ரீகாந்தால் 4-வது விக்கெட்டுக்கு களமிறக்கப்பட்ட சேத்தன் சர்மா, சிறப்பாக விளையாடி அசத்தினார். 96 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரி 1 சிக்சருடன் 101 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த போட்டியில் அவர் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் வேகப்பந்துவீச்சாளர் சதமடித்த சாதனை படைத்தார்.

உலககோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட்

1987-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பை தொடரில், நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியில், கேன் ரூதர்ஃபோர்டு, இயான் ஸ்மித், சேட்ஃபீல்ட் ஆகிய 3 வீரர்களையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சேத்தன் சர்மா, உலககோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த 3 விக்கெட்டுகளுமே போல்ட் முறையில் வீழ்த்தப்பட்டது. இந்த போட்டியில் கவாஸ்கர் சதம் அடிக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு தனது பந்துவீச்சில் வலிமையை இழந்த சேத்தன் சர்மா, கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார். இதில் குறிப்பாக ஆஸ்திரேலியா ஆசியகோப்பை இறுதிப்போட்டியில், கடைசி பந்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.

9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு கடைசி பந்தை கட்டுப்படுத்தினால் இந்தியா சாம்பியன் ஆகும் என்ற நிலையில், கடைசி பந்தை சேத்தன் சர்மா வீச, பாகிஸ்தான் அணியின் ஜாவியத் மியாண்ட் சிக்சருக்கு விரட்டி இந்திய அணியை தோற்கடித்தார். இதனால் சேத்தன் சர்மா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 1994-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக போட்டியில் சேத்தன் சர்மா வீசிய ஒரே ஓவரில் நியூசிலாந்து அணியின் ஸ்டீபன் ஃபிளமிங் 5 பவுண்டரிகள் விளாசினார். 1994-ல் நவம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போட்டியே இவரின் கடைசி போட்டியான அமைந்தது. அந்த போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

ஓய்வுக்கு பின்...

ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய சேத்தன் சர்மா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரியானாவில் வேகப்பந்துவீச்சு கிரிக்கெட் அகாடமியை தொடங்கினார். இந்த அகாடமி 2009-ல் மூடப்படடது. 2020-ல் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, 2022-ல் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்வி எதிரொலியாக அந்த பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு மீண்டும் அந்த பதவிக்கு விண்ணப்பித்தவுடன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேத்தன் சர்மா, 61 விக்கெட்டுகளும், ஒரு அரைசதத்துடன் 396 ரன்களும் குவித்துள்ளார். 65 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதத்துடன் 456 ரன்களும், 67 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1983-ம் ஆண்டு உலககோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யாஷ்பால் சர்மாவின் மருமகனான சேத்தன் சர்மாவுக்கு இன்று (ஜனவரி 03) பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment