இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்திய ப்ளூ அணியின் கேப்டனான சுரேஷ் ரெய்னா, காஸியாபாத்தில் இருந்து கான்பூருக்கு இன்று(செவ்வாய் கிழமை)அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்தார். புதன்கிழமை நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது ரேன்ஜ் ரோவர் காரில் அவர் சென்றுள்ளார். இதனிடையே, உத்திரபிரதேச மாநிலம் எட்வா பகுதியில் அவர் சென்று கொண்டிருக்கையில், அவரது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால், அவர் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார். ஒருவேளை அவர் அதிவேகமாக சென்றிருக்கும் போது முன்பக்க டயர் வெடித்திருந்தால், பெரிய பாதிப்பு ஏற்பட்டிக்கக்கூடும் என போலீஸார் தெரிவித்தனர்.
இதனால், அப்பகுதியில், சுரேஷ் ரெய்னா சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரில், மாற்று டயர் இல்லாதிருக்கவே, வேறொரு காரில் சுரேஷ் ரெய்னாவை போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் சுரேஷ் ரெய்னாவிற்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
சுரேஷ் ரெய்னா கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்து வருகிறார். சமீபத்தில் இலங்கை எதிரான தொடரிலும் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. யோ-யோ என்னும் உடற்தகுதி சோதனையில் சுரேஷ் ரெய்னா தகுதிபெறவில்லை என்பதாலே அவர் அணியில் இடம்பெறமுடியாமல் தவித்து வருகிறார். இந்த யோ-யோ உடற்தகுதி தேர்வில் 19.5-க்கும் அதிகமாக புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால், சுரேஷ் ரெய்னா குறிப்பிட்ட அந்த புள்ளிகளை பெறவில்லை. ஆனால், இந்திய கேப்டன் விராட்கோலி இந்த உடற்தகுதி தேர்வில் 21 புள்ளிகளை பெற்று ரொம்பவே ஃபிட்டாக இருக்கிறாராம்.