cricketing legend Sachin Tendulkar turned 49: கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லிஜண்ட் என பல பெயர்களுக்கு சொந்தக்காரரான சச்சின் தெண்டுல்கர், 2013இல் நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 49 வயதாகிறது.
ஏப்ரல் 24, 1973 அன்று மும்பையில் பிறந்த அவர், தனது 49 ஆவது பிறந்தநாளை ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியுடன் பயோ-பப்பில் மகிழ்ச்சியுடன் செலவிட்டு வருகிறார்.

16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய சச்சின், கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். 200 டெஸ்ட், 100 சர்வதேச சதங்கள், 34357 சர்வதேச ரன் என இரண்டு தசாப்தங்களாக விளையாடி வரும் சச்சினின் சாதனைகளை பலரும் அறிந்திருந்தாலும், இன்றைய தலைமுறையினருக்கு சச்சின் பற்றி தெரியாத 7 உண்மைகளை இச்செய்தி தொகுப்பில காணலாம்.

அண்டர்வியரில் டிஷூ பேப்பருடன் பேட்டிங் செய்த சச்சின்
சச்சினின் ‘Playing it My Way’ புத்தகத்தை புரட்டி பார்க்கையில், அவர் ஒரு முறை சுமார் 160 நிமிடம் தனது அண்டர்வியரில் டிஷூ பேப்பர்களை வைத்துக்கொண்டு விளையாடியது தெரியவந்தது.
2003 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 6 போட்டியின் போது, வயிற்று பிரச்சினை காரணமாக டெண்டுல்கர் தனது அண்டர்வியரில் டிஷூ பேப்பர்களை வைத்துகொண்டு பேட்டிங் செய்துள்ளார். அந்த போட்டியில், 97 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.
இந்தியாவுக்கு முன்பு பாகிஸ்தானுக்காக விளையாடிய சச்சின்
சச்சின் டெண்டுல்கர் தனது 16ஆவது வயதில், 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், அவர் முதல் முறையாக சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்தது பாகிஸ்தான் அணிக்கு என்பது பலருக்கும் தெரியவாய்ப்பில்லை.
ஜனவரி 20, 1987 அன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின் போது, இம்ரான் கானின் அணிக்கு சச்சின் மாற்று பீல்டராக அனுப்பப்பட்டார். இந்த சம்பவத்தை சச்சின் தனது புத்தகத்தில் நினைவுக்கூர்ந்துள்ளார்.

அதில்,நான் ஒருமுறை அவரது பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கினேன் என்பது இம்ரான் கானுக்கு நினைவிருக்கிறதா என்பது தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து சச்சினின் நண்பர் கூறுகையில், பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஓய்வெடுப்பதற்காக ஹோட்டலுக்கு சென்றிருந்தனர். அதனால், வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. ஹேமந்திடம் வந்த இம்ரான் கான், மூன்று அல்லது நான்கு வீரர்களை எங்கள் அணிக்காக பீல்டிங் செய்ய அனுப்பு வைக்குமாறு கூறினார். அப்போது அருகில், குஷ்ரு வசானியா, சச்சின் டெண்டுல்கர் இருந்தனர்.

ஹேமந்தை பார்த்த சச்சின், மராத்தியில் நான் போகட்டுமா என கேட்டார். அதற்கு சரி என ஹேமந்த் தலை அசைப்பதற்குள், சச்சின் மைதானத்திற்குள் மாற்று வீரராக சென்றுவிட்டார். அது, மேட்ச் முடியும் கடைசி நேரம் ஆகும். சச்சின் சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.
சச்சின் பேட்டில் அதிவேக சதம் அடித்த ஷாகித் அப்ரிடி
அப்ரிடி மாஸ்டர் பிளாஸ்டரின் பேட்டில் விளையாடி அதிவேக சதத்தை அடித்தார். 1996 இல் அக்டோபர் 4 ஆம் தேதி, 16 வயதான ஷாகித் அப்ரிடி, சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தார்.சுவாரஸ்யமாக, இது அவரது முதல் ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகும்.
அணிக்கு புதிதாக வந்த அப்ரிடிக்கு கிரிக்கெட் கிட் இல்லை. அப்போது, அவருக்கு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கின் பூட்ஸ் மற்றும் ஹெல்மெட் வழங்கப்பட்டது. நெட் பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், பேட் ஒன்றை அவருக்கு வழங்கியுள்ளார். இதில் விளையாடி பாரு, இது சச்சினின் பேட் என கூறியதாக அப்ரிடி ஒரு முறை பேட்டியில் தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கரும் அவரது மூடநம்பிக்கையும்
பாகிஸ்தானுக்கு எதிரான கோட்லா டெஸ்டில் கும்புளே 10 விக்கெட்களையும் எடுத்தார். ஒவ்வொரு ஓவரின் தொடக்கத்திலும், சச்சின் கும்ப்ளேவின் ஸ்வெட்டர் மற்றும் தொப்பியை நடுவரிடம் கொடுத்த போதெல்லாம், விக்கெட் விழுந்தது. இதை கவனித்த சச்சின், கும்ப்ளே 10 விக்கெட் எடுக்கும்வரை, அதையே பின்பற்றினார்.
மூன்றாவது நடுவரால் அவுட் செய்யப்பட்ட முதல் பேட்ஸ்மேன் சச்சின்
1992 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் மூன்றாவது நடுவரால் அவுட் செய்யப்பட்ட முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் சச்சினுக்கே சேரும். மூன்றாவது நடுவராக கார்ல் லிபென்பெர்க் இருந்தார்.
கிரீஸில் ரவி சாஸ்திரியுடன் டெண்டுல்கர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பிரையன் மெக்மில்லன் வீசிய பந்தை அடித்தார். அந்த பந்து நேராக ஜான்டி ரோட்ஸிடம் சென்றது. அதற்குள் ஒரு ரன் எடுத்துவிட சச்சின் முயன்றார். ஆனால், சாஸ்திரி வேண்டாம் என கூறியதால், மீண்டும் கிரீஸை நோக்கி சச்சின் ஓடினார். ஆண்ட்ரூ ஹட்சன் ஸ்டம்ப் அருகில் சென்று, ஜான்டி ரோட்ஸ் வீசிய பந்தை பிடித்து ஸ்ட்பமில் அடித்தார். சச்சின் கீரிஸ் வந்ததும் ஒரே நேரம் என்பதால், மூன்றாவது நபரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் ரெட் லைட் பிரஸ் செய்து அவுட் என அறிவித்தார்.
2016 ஆம் ஆண்டில் டெண்டுல்கர் ஆன்லைன் சில்லறை விற்பனை முயற்சியை தொடங்கியபோது, தொழில்நுட்பம் கிரிக்கெட்டுக்கு உதவியது மற்றும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தியது என்றார். 1992 இல் தென்னாப்பிரிக்காவில் தொழில்நுட்பத்தின் மூலம் நான் முதன்முதலில் வெளியேறினேன். அது இப்போதும் நியாபகம் இருக்கிறது என்றார்.
சச்சினின் டெஸ்ட் சராசரி வினோத் காம்ப்லியை விட குறைவு
இடது கை பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி தனது டெஸ்ட் வாழ்க்கையை 1995 இல் 54.20 சராசரியுடன் முடித்தார். காம்ப்லி 17 டெஸ்ட் போட்டிகளில் 1,084 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சராசரி 53.78 இல் முடிந்தது.
@sachin_rt .Dear Master Blaster.I Love You pic.twitter.com/DAAcgT0ka7
— Vinod Kambli (@vinodkambli349) May 27, 2017
முதல் டெஸ்ட் சதத்தை ஷாம்பெயினுடன் கொண்டாடாத சச்சின்
1990 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தபோது அவருக்கு ஒரு மேக்னம் ஷாம்பெயின் பாட்டில் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் விதிகளின்படி, 18 வயதிற்குட்பட்டவர்களை அவ்வாறு செய்ய அனுமதியில்லை என்பதால், அவரால் அதை திறக்க முடியவில்லை. சுமார் 8 வருடம் காத்திருந்த சச்சின், தனது மகள் சாராவின் முதல் பிறந்தநாளில் அதனை ஓப்பன் செய்து மகிழ்ந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil