உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஐந்தாவது முறை வென்றுள்ளார்.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வருடத்தில் மட்டும் சர்வதேச போட்டிகள் மற்றும் கிளப் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகளில் ஆடியுள்ள ரொனால்டோ, மொத்தம் 44 கோல்கள் அடித்துள்ளார். குறிப்பாக, சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 2 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்த நிலையில், இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். மெஸ்சி 2-வது இடத்தையும், நெய்மர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதை ஐந்தாவது முறையாக பெற்றுள்ளார். இதன் மூலம் ஐந்து முறை விருது வாங்கியிருந்த மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
விருது பெற்றபின் ரொனால்டோ பேசுகையில், "எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிகச்சிறந்த தருணம். உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம், கோச், அணி வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் எனக்கு எப்போதும் ஆதரவு தந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால், எனக்கு ஏழு விருதுகள் வேண்டும். ஐந்து என்பது நல்ல விஷயம் தான். ஆனால், ஏழு தான் எனக்கு ராசியான நம்பர். அதை எட்டினால், மிகச் சிறப்பாக இருக்கும்" என்றார்.
ரியல் மாட்ரிட் அணியின் ஷினேடின் ஷிடேன் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை பெற்றார்.