செருப்பை வீசி மரியாதை செய்த ரசிகர்கள்! வெற்றியை பரிசளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இன்றும் வென்று, கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் கடமையை அவர்கள் தவறாமல் செய்திருக்கின்றனர்.

அன்பரசன் ஞானமணி

கணத்த இதயத்துடன் இந்த கட்டுரை…

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவே விட மாட்டோம் vs நடத்தியே தீருவோம்.

இவ்விரு இறுமாப்புகளால் தமிழனின் கெளரவம், மானம் நேற்று கப்பல் ஏறியிருக்கிறது. ‘தல’ தோனி, ‘குட்டித் தல’ ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் போல வருமா? என்றெல்லாம் ஆனந்த கூச்சலிட்டுவிட்டு, இப்போது அவர்கள் மேலேயே செருப்பைக் கொண்டு வீசியிருக்கிறோம். நல்லா, மணமணவென்று இருந்தது இந்த சம்பவம்.

போட்டியை தவிர்க்க வேண்டுமென்றால், வராமல் இருந்திருக்கலாம். ஆனால், வந்து செருப்பை வீசுவது என்பது தமிழனின் மாண்பே அல்ல. நாம் வாக்கெடுத்து தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் மீது செருப்புலாம் வீச வேண்டாம். அட்லீஸ்ட் கேள்வியாவது கேட்டிருப்போமா!?  சரி! விஷயத்திற்கு வருவோம்.

பாம்பு வரும், பள்ளி வரும் என்றெல்லாம் எதிர்பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேடி வந்தது என்னவோ வெற்றியே!.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்ய, கொல்கத்தாவின் வழக்கமான மெகா அதிரடி ஒப்பனர்கள் சுனில் நரைன் மற்றும் க்ரிஸ் லின் களமிறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் 18 ரன்கள். அதோடு அவரை தோனி உட்கார வைத்துவிட்டார். அடுத்த ஓவரை ஹர்பஜன் கையில் கொடுத்த கேப்டன் தோனிக்கு ‘தம்ப்ஸ் அப்’ காட்டலாம். இது எதிர்பார்த்தது தான். ஹர்பஜன் ஓவரில் சுனில் நரைனின் பேட் எட்ஜில் பந்து படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல், ஹர்பஜனின் முதல் ஓவரிலேயே நரைன் 12 ரன்னில் கேட்ச் ஆனார். அந்த 12 ரன்னும் இரு சிக்சரில் வந்தவை.

ஆனால், அதன் பிறகு வந்த உத்தப்பா 29 ரன்னிலும், நிதிஷ் ராணா 16 ரன்னிலும் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் க்ரிஸ் லின்னும் 22 ரன்னில் அவுட்டானார். அதிலும், உத்தப்பாவை ரெய்னா ரன் அவுட்டாக்கிய விதம், ‘அக்மார்க் ரெய்னா’ ரகம்!.

இப்படி ஆனந்தமாய் சென்றுக் கொண்டிருந்த பயணத்தில், ரசல் என்ற புயல் ஒன்று வந்தது. பழக்கப்பட்ட புயல் தான். நேற்று கொஞ்சம் அதிகமாக சுழன்று அடித்தது. 36 பந்தில் 88 ரன்கள். ஒரேயொரு பவுண்டரி தான். ஆனா, 11 சிக்சர். ஆடி முடித்த போது அவருக்கும் மூச்சு வாங்க, சிஎஸ்கே பவுலர்களுக்கும் மூச்சு வாங்க, பார்த்த நமக்கும் பலமாக மூச்சு வாங்கவே செய்தது. என்னா அடி!! ஐபிஎல் வரலாற்றில் ஏழாவது வீரராக களமிறங்கி அதிக ரன் விளாசிய வீரர் எனும் சாதனையை இழந்து, முறித்து படைத்திருக்கிறார் ரசல். அதென்ன, இழந்து முறித்து படைத்து?

ஐபிஎல்-லில் இதற்கு முன்பு 2015ம் ஆண்டு, பஞ்சாப் அணிக்கு எதிராக 7-வது வீரராக களமிறங்கிய ரசல், 36 பந்தில் 66 ரன்கள் குவித்து இருந்தார். இதுதான், 7-வதாக களமிறங்கிய வீரரின் அதிகபட்ச ஸ்கோர். இந்தச் சாதனையை, இந்த ஐபிஎல்-லின் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக ஏழாவது வீரராக களமிறங்கி 68 ரன்கள் குவித்து, நம்ம பிராவோ முறியடித்தார். இன்று(ஏப்ரல் 10), சென்னைக்கு எதிரான ஆட்டத்தில், ஏழாவது வீரராக களமிறங்கிய ரசல், 88 ரன்கள் விளாசி, பிராவோ சாதனையை முறியடித்து மீண்டும் நம்பர்.1 ஆகியிருக்கிறார். இப்போது புரிகிறதா இழந்து, முறித்து, படைத்து!.

அதிலும், நேற்று சொந்த ஊர்க்காரரான பிராவோவை ரொம்பவே நோக வைத்துவிட்டார். 3 ஓவரில் 50 ரன்கள். தோனி-லாம் கப்சிப் மோடிற்கே சென்றுவிட்டார். என்னத்த சொல்ல… வெளிலையும் அடிக்குறாங்க.. உள்ளேயும் அடிக்குறாங்க!. இரண்டு வருஷம் கழிச்சு திரும்பி வரும்போதா இப்படி நடக்கணும்!? தோனியின் பீலிங்கோடு நாமும்!.

ஆக, மொத்தம் 20 ஓவரில் 202 ரன்களை குவித்தது கொல்கத்தா. உண்மையில் அபார ஆட்டம் தான். 89-5 என்ற நிலையில் இருந்து, 200-ஐ கடப்பது என்பது வாவ்!.

இதையடுத்து, ஹியூஜ் டோட்டலை சேஸ் செய்ய சிஎஸ்கே களமிறங்கியது. ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு இணை அதிரடியாக ஆட்டத்தை நகர்த்திச் சென்றது. 19 பந்தில் 42 ரன்கள் விளாசி வாட்சன் வெளியேற, 26 பந்தில் 39 ரன்களுடன் ராயுடுவும் திருப்திப்பட்டுக் கொண்டார். ‘குட்டித் தல’ ரெய்னாவின் காலில் ரன் ஓடும் போது பிடிப்பு ஏற்பட, அவரால் சரியாக விளையாடவே முடியவில்லை. இறுதியில் 12 ரன்னில் கேட்ச் கொடுத்து, ‘முடியலடா சாமி’ எனும் பாடி லேங்குவேஜோடு வெளியேறினார்.

அப்புறம் ‘தல’ தோனி, 50 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆடிக் கொண்டிருந்தார். அதிலும், சுனில் நரைன் ஓவர் வந்தாலே, கொஞ்சம் வெலவெலத்தே போகுது தல!. அந்த ‘ஸ்பைக்’ பவுலரின் பந்தை தோனியால் காட்டுத் தனமாக சுத்தவும் முடியல… கெஸ் பண்ணி அடிக்கவும் முடியல…  ஐபிஎல் ஹிஸ்டரியில், இதுவரை சுனில் நரைனின் ஓவரில் 52  பந்துகளை தோனி சந்தித்து இருக்கிறார். அதில் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் கூட அவர் அடித்ததில்லை. மொத்தமாகவே 25 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அதன்பின், ஆக்ஸிலேட்டரை சற்று தோனி கூட்டினாலும் 28 பந்தில் 25 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார்.

மறுபக்கம், சென்னை அணியில் முதன் முதலாக வாய்ப்பு பெற்ற சாம் பில்லிங்ஸ் 21 பந்தில் அரைசதம் விளாசி, ரசிகர்கள் மற்றும் சென்னை நிர்வாகத்தின் நம்பிக்கையை ஏகோபித்தமாக பெற்றார். ஆனால், அவரும் 56 ரன்னில் அவுட்டாக, மீண்டும் சிக்கலில் சிக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கடைசி ஓவரில், சென்னைக்கு தேவை 17 ரன்கள். பேட்டிங் செய்தது பிராவோ. பவுல் செய்வது வினய் குமார். முதல் பந்து சிக்சர் வித் நோ-பால். கிடைத்தது ஃப்ரீ ஹிட். அந்த பந்தில் இரண்டு ரன்கள். ஸோ.. ஒரு பந்தில் எட்டு ரன்கள்.

இரண்டாவது பதில் ஒரு ரன்..

மூன்றாவது பந்து வைட்… (ஷாருக்கானுக்கு வேறு தூக்கம் தலையைச் சுற்றுகிறது!)

மீண்டும் போடப்பட்ட மூன்றாவது பந்தில் ஒரு ரன். ( இப்போ 3 பந்தில் 5 ரன்கள் தேவை)

நான்காவது பந்தில் மீண்டும் ஒரேயொரு ரன்.

ஐந்தாவது பந்து ஸ்லோ ஆஃப் – கட்டர். லாங் ஆனில் இமாலய சிக்ஸ் தூக்கினார் ஜடேஜா.

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கண் கலங்கி பேசிய தோனி, ‘நாங்கள் மீண்டும் உங்களிடம் வந்துவிட்டோம். இனி உங்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம்’ என்றார். மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் தோனியை வாக்கை நிரூபித்துக் காட்டிய பிராவோ, ‘இரண்டு வருடங்களாக இந்த வெற்றிக்காக காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு எனது ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன்’ என்றார். இதோ, இன்றும் வென்று, கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் கடமையை அவர்கள் தவறாமல் செய்திருக்கின்றனர். ஆனால், நாம் அவர்கள் மீது செருப்பை வீசி இருக்கிறோம். இதுதான் தமிழர்களாக நாம் அவர்களுக்கு அளித்த பரிசு!.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close