கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தோல்விக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதுவும் புனேவில்... இன்று நிச்சயம் ஆடும் லெவனில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் தோல்வி பெற்றதால் மாற்றம் என்றால், அது தவறு. தோல்வி ஒரு காரணம் என்றாலும், அதையும் தாண்டி அலச வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
ரவீந்திர ஜடேஜா:
ஏழு கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலத்தில் தக்க வைக்கப்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால், அவர் எதற்காக அணியில் நீடிக்கிறார் என்ற காரணம் நமக்கு விளங்கவில்லை.
மும்பையுடனான முதல் போட்டியில் 12 ரன்கள், ஒரே ஒரு வீசி 9 ரன்கள் கொடுத்தார். விக்கெட் இல்லை
கொல்கத்தா உடனான இரண்டாவது போட்டியில் 11 ரன்கள், இரண்டு ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
பஞ்சாப் உடனான மூன்றாவது போட்டியில் 13 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். ஒரு ஓவர் கூட வீசவில்லை.
ராஜஸ்தான் அணி உடனான நான்காவது போட்டியில் 2 ரன்கள் எடுத்தார். ஒரு ஓவர் வீசி 6 ரன்கள் கொடுத்தார்.
ஹைதராபாத் உடனான போட்டியில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை... ஆனால், இப்போட்டியில் மட்டும் முழுமையாக 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்தார். விக்கெட் இல்லை.
பெங்களூரு அணியுடனான ஆறாவது போட்டியில், 2 ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் ஏதும் இல்லை. கடினமான சேஸிங் போது தோனிக்கு முன்னதாக களம் இறக்கப்பட்டவர் 5 பந்தில் 3 ரன்கள் மட்டும் எடுத்தார்.
மும்பை அணியுடனான ஆறாவது போட்டியில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு ஓவர் கூட பவுலிங் செய்யவில்லை.
ஆக மொத்தம் 7 போட்டிகளில் 47 ரன்களும், 12 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி இருக்கிறார் ஆல்-ரவுண்டர் ஜடேஜா. பேட்டிங்கில் வாய்ப்பு சரிவர கிடைக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும், கிடைத்த வாய்ப்பில் சாதித்து இருக்க வேண்டாமா?. அதுமட்டுமின்றி, 7 போட்டியில், தோனி மொத்தமாக 10 ஓவர்களே இவருக்கு கொடுத்துள்ளார் என்றால், எதற்கு இவர் அணியில் இருக்கிறார் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
சாம் பில்லிங்ஸ்:
மும்பையுடனான முதல் போட்டியில் அணியில் இடம் பெறவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 23 பந்தில் 56 ரன்கள் விளாசி, சென்னை மண்ணில் சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆனால், அதன் பின் ஆடிய ஐந்து ஆட்டங்களில் மொத்தமாகவே 24 ரன்களே எடுத்துள்ளார். ஒரு போட்டியைத் தவிர, மற்ற எந்த போட்டியிலும் டபுள் டிஜிட் கூட எடுக்கவில்லை.
முதலில் சாம் பில்லிங்ஸுக்கு பதிலான சரியான மாற்று குறித்து பார்க்கலாம். இரண்டு வீரர்களை இதில் பரிசீலிக்கலாம். டேவிட் வில்லே மற்றும் லுங்கி ங்கிடி. டேவிட் வில்லே ஆல்-ரவுண்டர். லுங்கி ங்கிடி பக்கா ஃபாஸ்ட் பவுலர்.
பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டும் என தோனி நினைத்தால், ஒன்று பில்லிங்ஸ்-ஐ அணியில் நீடிக்க வைக்கலாம், அல்லது டேவிட் வில்லேவை அணியில் சேர்க்கலாம். ஆனால், பவுலிங்கை வலுப்படுத்த நினைத்தால், லுங்கி ங்கிடி தான் சரியான சாய்ஸ். இந்த முடிவு தோனி கையில் தான் உள்ளது. பவுலிங்கை வலிமைப்படுத்துவதே சிறந்தது என்பது நமது கருத்து.
அதேபோன்று, ரவீந்திர ஜடேஜாவை நீக்க வேண்டும் என்பதும் பரவலான கருத்தாக உள்ளது. ஆனால், தோனியோ 'முடியாது' என்ற மோடியிலேயே இருப்பது போல் தெரிகிறது. 'சரியான வாய்ப்பு கிடைத்தால் ஜடேஜா சாதிப்பார்' என்று ஏழெட்டு வருடங்களாகவே தோனி கூறிக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால், பல வாய்ப்புகள் கிடைத்தும், ஜடேஜா அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை!.
லோ-ஆர்டரில் இறங்குவதால், ஜடேஜாவுக்கு போதுமான அளவு பேட்டிங் செய்ய பந்துகள் கிடைப்பதில்லை என்ற லாஜிக்கை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மொத்தமாகவே 12 ஓவர்கள் தான் வீசியிருக்கிறாரே! ஏன் அவருக்கு நிறைய ஓவர்கள் கொடுப்பதில்லை. அதுவும் சில போட்டிகளில் அவர் பவுலிங்கே பண்ணலையே!.
இந்த நிலையில், இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கும் இப்போட்டியின் Live Cricket ScoreCard-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.