ஒரு குட்டிக் கதை
சிறுவன் ஒருவன் தன் தாயுடன் ஆற்றைக் கடக்கிறான்.
அப்போது அந்த தாய் சொல்கிறாள், 'மகனே! என்னுடைய கைகளை பத்திரமாக பிடித்துக் கொள்' என்று.
அதற்கு மகன் சொல்கிறான், 'வேண்டாம் தாயே! நான் உங்கள் கைகளை பிடித்தால், நீரின் வேகத்தால், உங்கள் கைகளை நான் நழுவ விட்டுவிட வாய்ப்புள்ளது. அதுவே, நீங்கள் எனது கைகளை பிடித்துக் கொண்டால், எனக்கு தெரியும், நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் என்னை விட்டுவிட மாட்டீர்கள் என்று'!.
இந்தக் கதை 2018ல் மகேந்திர சிங் தோனிக்கும் - ரவீந்திர ஜடேஜாவுக்கு மிகச் சரியாக பொருந்தும் என நம்புகிறேன். நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் எதிரான போட்டியில், சென்னை தோற்றதற்காக மட்டும் இதைக் கூறவில்லை. அப்படியென்ன, ஜடேஜா மீது தோனிக்கு உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கை என்பதை ஆராயவே இந்தக் கட்டுரை!.
இந்த 2018 ஐபிஎல்-ல் சிஎஸ்கே ஆடியுள்ள 9 போட்டிகளிலும் விளையாடிய ஜடேஜா அடித்த மொத்த ரன்கள் 59. வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 3. ஒரு வீரர் இவ்வளவு சொதப்பிய பிறகும், மீண்டும் மீண்டும் அணியில் இடம் பிடித்தால், இதனை அருகில் இருந்து பார்க்கும் மற்ற சக வீரர்கள் என்ன நினைப்பர்கள் என்பதை கூடவா தோனி கருத்தில் கொள்ளவில்லை?. இதனால் அணி வீரர்களின் செயல்திறன் பாதிக்காதா? அதனை அணியின் ரிசல்ட் பாதிக்காதா?.
பொதுவாக, தங்கள் மகள் ஆளான பிறகு பெற்றோர்கள் சொல்லும் வார்த்தை இது. 'இவள எப்படியாச்சும் ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்திட்டா போதும்!' என்பது. அப்படி, ஜடேஜாவை தோனியின் கைகளில் பிடித்துக் கொடுத்துவிட்டார்களோ என்றே நடப்பவற்றை பார்த்தால் எண்ணத் தோன்றுகிறது.
நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், சிஎஸ்கேவை பேட் செய்ய அழைக்கிறார். சரி! டாஸ் அமைவது நம் கைகளில் இல்லை. களமிறங்கிய சிஎஸ்கே அணி, 10 ஓவர்களின் முடிவில் அடித்திருந்த ரன்கள் 90-1. ரன் ரேட் 9.௦௦.
ஆனால், அடுத்த 10 ஓவரில் சென்னை அடித்த ரன்கள் 87 ரன்கள். அதாவது 60 பந்தில் 87 ரன்கள். பந்துக்கும் ரன்னுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 27. சென்னை தோற்க மிக முக்கிய காரணம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் சொதப்பியது போல, நேற்றைய போட்டியிலும் கடைசி 10 ஓவர்கள் சொதப்பியதே.
10.2வது ஓவரில் வாட்சன் அவுட்டாகிறார். 11.4வது ஓவரில் ரெய்னா அவுட்டாகிறார். 14.4 ஓவரில் ராயுடு அவுட்டாகிறார். அப்போது ஸ்கோர் என்ன தெரியுமா? 119-4. இப்போது தோனி, தான் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் ரவீந்திர ஜடேஜாவை களமிறக்குகிறார். இருவரும் 19.5வது ஓவர் வரை, கிட்டத்தட்ட முடிவு வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், 14.5வது பந்தில் இருந்து அடித்த மொத்த ரன்கள் 58. அதில் தோனி மட்டும் அடித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 40 . ஜடேஜா அடித்தது 12 ரன்கள். ஒரேயொரு பவுண்டரி.
இந்த ஐபிஎல் சீசனில், ஜடேஜாவின் ஃபார்ம் என்ன என்பது நமக்கு தெரியும். பிராவோ இன்னும் களமிறங்கவில்லை என்பதும் தோனிக்கு தெரியும். ஆனால், 7 கோடி ரூபாய்க்கு சென்னை அணிக்காக உங்கள் சிபாரிசால் தக்க வைக்கப்பட்டார் என்ற ஒரு காரணத்துக்காக, இன்னும் ஜடேஜாவை எவ்வளவு தான் நம்புவீர்கள் தோனி? பிராவோ இறங்கி, உடனே அவுட்டாகி சென்றால், அது வேற கதை. ஆனால், அவரையும் களம் இறக்காமல், ஜடேஜாவிற்கு வாய்ப்பு கொடுத்து, அவர் அடிக்கவும் முடியாமல், உங்கள் நோக்கத்தை நிறைவேற்றவும் முடியாமல் தவிக்கிறாரே! இது உங்களுக்கு தெரிகிறதா இல்லையா தோனி? அந்தளவிற்கு அவர்மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைப்பதற்கான காரணம் என்ன?.
பேட்டிங்கில் மட்டுமல்ல, நேற்று 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா 39 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். அவர் ஒருவரே 6 வைட்களையும் வீசியிருக்கிறார். இவற்றைவிட மிகவும் கவலைக் கொள்ளக் கூடிய விஷயம் என்ன தெரியுமா?. ஆசிப் வீசிய 2வது ஓவரில், சுனில் நரைன் கொடுத்த இரண்டு எளிதான கேட்சுகளை அடுத்தடுத்த பந்தில் தவற விட்டார் ஜடேஜா. அப்போது சுனில் நரைன் 6 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். ஆனால், அந்த வாய்ப்புகளுக்கு பின் 32 ரன்கள் எடுத்தார்.
அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக, 6 ஓவரில் வெற்றிக்கு தேவை 85 ரன்கள் என்றிருந்த போது, பிராவோவை உட்கார வைத்து, ஜடேஜாவை களமிறங்கச் செய்தீர்கள். அன்று தோற்றோம். அந்தப் போட்டியில், 'தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் ஜடேஜா நன்றாக வருவார்' என்றீர்கள். மிஸ்டர் தோனி...! ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் ஆட வந்து 9 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
நேற்று, மீண்டும் ஜடேஜாவை பிராவோவிற்கு முன்பு களமிறக்கினீர்கள். மீண்டும் தோற்றிருக்கிறோம். பிராவோவிற்கு முன்னதாக ஜடேஜாவை இறக்கியதற்காகவோ, நேற்று இரண்டு கேட்சை விட்டதற்காகவோ கண்டிப்பாக ஜடேஜாவை விமர்சிக்கவில்லை. சுத்தமாக ஃபார்மில் இல்லாத, ஜடேஜாவிற்கு மட்டும் அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது தான் பிரச்சனை!.
இங்கே வள்ளுவரின் குரல் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
பொருள்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.
நீங்கள் ஜடேஜாவின் தற்போதைய ஃபார்ம் என்ன என்பதை ஆராய்ந்து இருக்க வேண்டும். அல்லது இத்தனை போட்டிகளில் சொதப்பிய பிறகாவது விழித்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ஆராய்ந்து தெளிவடைந்து 7 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து, தக்க வைத்த வீரரை காப்பாற்ற, ஒவ்வொரு மேட்சும் அடிப்பாரா, மாட்டாரா?, நன்றாக பவுலிங் செய்வாரா, மாட்டாரா? என ஐயப்பட்டு, அந்த சுமையை உங்கள் தலையில் சுமந்து, அந்த பாரம் தாங்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைகிறது என்றால், அதை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளவே முடியாது தோனி!.
ஆற்றில் செல்லும் போது தோணியில் ஒரேயொரு ஓட்டை விழுந்தால், தோணியில் உள்ள அனைவரும் நட்டாற்றில் மூழ்கி இறக்க நேரிடும். இது தோணிக்கும் பொருந்தும், தோனிக்கும் பொருந்தும்.
கட்டுரை ஆசிரியர்: அன்பரசன் ஞானமணி (anbarasan.gnanamani@indianexpress.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.