புனேவில் இன்று மாலை 4 மணிக்கு நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
9 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே, 6 போட்டியில் வென்றது. ஆனால், கொல்கத்தாவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில், சென்னை அணி சரண்டர் ஆனது. முதல் 10 ஓவரில் சிறப்பாக ஆடும் சிஎஸ்கே, கடைசி 10 ஓவர்களில் சொதப்பியதால் தான் மும்பை மற்றும் கொல்கத்தாவுக்கு எதிராக தோற்றது.
பந்துவீச்சில், கடைசிக் கட்டத்தில் சென்னை பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவதும் கவலைக் கொள்ளக் கூடிய விஷயமாக உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப இறுதிக் கட்டத்தில் பவுலர்கள் தங்கள் வேரியேஷன்களை மாற்றுவதில்லை.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூருவும், சென்னையும் மோதின. இதில் டாஸ் வென்ற தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் பார்த்திவ் படேல் (53) மற்றும் டிம் சவுதி (36) ஆகி இருவரும் மட்டும் தான் இரட்டை இலக்கை தொட்ட வீரர்கள். மற்ற எட்டு பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறினர். கேப்டன் கோலி 8 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 1 ரன்னிலும் அவுட்டானார்கள். இதனால், அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டும் எடுத்தது.
கடந்த போட்டிகளில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த ரவீந்திர ஜடேஜா, 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 18 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து, 128 ரன்கள் எடுத்து வென்றது. அம்பதி ராயுடு 32 ரன்களும், ரெய்னா 25 ரன்களும் எடுக்க, இறுதிக் கட்டத்தில் தோனி சாஹலின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி, அணியை வெற்றிப் பெற வைத்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம், 10 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. இன்று 9வது போட்டியில் ஆடிய பெங்களூரு 6வது தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.