இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியை விட, இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், நிகழ்காலத்தில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்குகிறார் என பாராட்டியிருக்கிறார் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் + கேப்டன் டிம் பெய்ன்.
பெய்ன்(Paine) என்ற வார்த்தைக்கு ஏற்ப, இங்கிலாந்து தொடர் முழுவதும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பெய்னை(Pain) அனுபவித்து இருக்கிறார் இவர். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்து துடைத்து எடுத்திருக்கிறது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.
இந்த ஒருநாள் தொடரில், இங்கிலாந்து விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர், 275 ரன்கள் எடுத்துள்ளார். அதில், ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது களமிறங்கிய பட்லர், 110 ரன்கள் எடுத்து, இறுதிவரை நாட் அவுட்டாக நின்று 207 ரன்கள் இலக்கை எட்ட வைத்தார். அதுமட்டுமின்றி, ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணியின் நான்காவது ஒயிட்வாஷ் சம்பவம் அரங்கேற காரணமாக அமைந்தார்.
இந்தப் போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், "தற்போதைய நிலையில், வெள்ளை பந்து கிரிக்கெட் ஆட்டத்தில், உலகின் சிறந்த வீரராக திகழ்பவர் ஜோஸ் பட்லர் தான். அவருக்கு வேறு எந்த வீரரும் சவால் அளிக்கக் கூடிய இடத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எம்எஸ் தோனி நன்றாக விளையாடுகிறார், ஆனால் இந்த தருணத்தில் ஜோஸ் தான் உச்சக்கட்ட வலிமையோடு இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
ஆம்! உண்மை தான்... டிம் பெய்னின் கூற்றில் நமக்கு பெரிய வேறுபாடு கிடையாது. ஜோஸ் பட்லர், இந்த தருணத்தில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, அபாயகரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார் தான்.
டி20 மயமாகி போன கிரிக்கெட் உலகில் இருந்து வந்த ஜோஸ் பட்லருக்கு அதிரடி என்பது மிகச் சாதாரணமானது. ஆனால், ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் எடுத்தால் மிகப்பெரிய விஷயம் என்ற காலத்தில் இருந்து வந்த தோனி, அப்பொழுதே அதிரடியில் வெளுத்துக் வாங்கியவர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் கேப்டனாவதற்கு முன்பு வரை, அவரது ஆட்ட பாணி, வந்தோம்.. அடிச்சோம்.. போனோம்... என்ற நிலையில் தான் இருந்தது. இதனால், பிரபலம் ஆன பின்னர் கூட, அவரால் சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
ஆனால், என்று அவர் கையில் கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டதோ, அப்பொழுதே தனது ஆட்ட பாணியை முற்றிலும் மாற்றிவிட்டார். களம் இறங்கியதில் மிக பொறுமையாக விளையாடுவது, இலக்கிற்கு ஏற்ப கடைசிக் கட்டத்தில் அதிரடியை தொடங்குவது என அவரது பாணி மெகா ஹிட்டானது. இந்தியா 100-7 என்று இருந்தால் கூட, ஸ்கோர் போர்டில் தோனியின் பெயர் உயிருடன் பளிச்சிடும். இன்று வரை அதனை மிகச் சரியாக ஃபாலோ செய்து வருகிறார். இருப்பினும், கடந்த இரு ஆண்டுகளாக அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டு இருந்தது உண்மை தான். அதனை கருத்தில் கொண்டால், தோனியுடன் ஒப்பிடும் போது, பட்லர் பெட்டர் தான்.
ஆனால், 2018 ஐபிஎல் தொடரை பெய்ன் பார்த்திருக்க வேண்டும். அதில், தோனி ஆடிய அதிரடி ஆட்டங்கள் இன்னும் கண் முன்னே நிற்கிறது. அவர் நிறைய சிக்ஸர்கள் அடித்தார் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. இன்று, அம்பயர்கள் தவிர, கிரவுண்டில் இறங்கும் வீரர்கள் அனைவருமே சிக்ஸர் அடிக்கின்றனர். ஆனால், நாம் சொல்ல வருவது 'கனெக்டிங்'.. அதாவது, தன்னை நோக்கி வரும் பந்திற்கு ஏற்றவாறு, பேட்டை சுழற்றும் அந்த கனெக்டிங் தோனியிடம் இருந்து அபரிதமாக இந்த ஐபிஎல்-ல் இருந்து வெளிவந்துள்ளது.
ஐபிஎல் தொடரில், அவர் எப்போதும் இல்லாத அளவிற்கு ஜொலித்ததற்கு இதுதான் காரணம். இத்தனைக்கும், எங்கு பவுல் செய்தால் தோனியால் அடிக்க முடியாது என்று ஆயிரம் வீடியோ ரெஃப்ரன்சிங்குடன் பந்துவீசிய பவுலர்களின் பந்துகள் மேற்கூரையில் கிடந்தது என்பது வரலாறு.
இதே, கனெக்டிங் + ஃபார்ம் தோனியிடம் கண்டினியூ ஆகிறது என்றால், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், பெய்ன் விசித்திரமான ரிசல்ட்டை பார்ப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதோடு, அவர் தனது கருத்தை மனதிற்குள் சப்தமில்லாமல் மாற்றிக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கலாம்.
தோனியை சற்று கீழிறக்கி பெய்ன் தரமிட்டதற்காக இதைச் சொல்லவில்லை. தோனியின் கரண்ட் ஃபார்ம் இதனை சொல்ல வைக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.