உலகக் கோப்பைத் தொடர் 2019ல் இந்தியாவின் பாஸிட்டிவ் நோட் நேற்று தொடங்கியிருக்கிறது. ஆம்! பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி, 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஆனால், இந்தப் போட்டியை 'வெற்றி' எனும் ஒற்றை வார்த்தையில் கடந்துவிட முடியாது. சில விஷயங்களில் Depth காண வேண்டியது அவசியம்.
ஓப்பன் தராத ஓப்பனர்ஸ்
டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைக்க, ரோஹித் - தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது ஸ்விங் அண்ட் ஃபேஸ் பவுலிங்கை மறந்து போயிருந்த முஸ்தாபிசூர் ரஹ்மான் ஓவரில், ஆறு மாத காலமாக ஃபார்மில் இல்லாத தவான் எல்பிடபிள்யூ ஆகி 1 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து, 42 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த ரோஹித், ருபெல் ஹொசைன் ஓவரில் இன்சைட் எட்ஜ் ஆகி வெளியேறினார்.
விராட் கோலி 47 ரன்களிலும், விஜய் ஷங்கர் 2 ரன்களிலும் அவுட்டாக, லோகேஷ் ராகுல் - தோனி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நாம் உலகக் கோப்பை பயிற்சிப் போட்டி தொடங்கியதில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம், இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லுகிறதோ இல்லையோ, இந்திய அணி வீரர்கள் மூன்று பேருக்கு இது மாபெரும் தொடராக அமையப் போகிறது என்று,
ஹர்திக் பாண்ட்யா,
லோகேஷ் ராகுல்,
ஜஸ்ப்ரித் பும்ரா.
இதில் லோகேஷ் ராகுல், நாம் சொன்னதை நேற்றைய ஆட்டத்தில் கச்சிதமாக பூர்த்தி செய்திருக்கிறார். 99 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து, பஞ்சாப் டூ கார்டிஃப் வரை தனது ஃபார்மை கடத்திச் சென்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார். அவர் சதம் அடித்தது கூட பெரிய விஷயமல்ல... இந்தியா 83 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த போதும், டிஃபன்ஸ் ஆடாமல், அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடியது தான் இங்கு பேசுபொருளாக உருவாகி இருக்கிறது. இது தான் பாண்டிங் வகையறா கிரிக்கெட், ஆஸ்திரேலியா வகையறா கிரிக்கெட். இங்கிலாந்து கண்டிஷனில் இப்படியொரு மனநிலை கொண்ட பேட்ஸ்மேன் தான் அணிக்கு தேவை. அந்தவிதத்தில் லோகேஷ் நமது பொக்கிஷம் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்த சர்பிரைஸ் மகேந்திர சிங் தோனி....
ஏன் சர்பிரைஸ் என்று சொல்கிறேன் என்றால், சமீப கால டிராக் ரெக்கார்ட்ஸில் ஒருநாள் போட்டிகளில் தோனி இப்படியொரு இன்னிங்ஸை கொடுத்ததில்லை. 78 பந்துகளில் 113 ரன்கள். இதில் 7 சிக்ஸர்களும் அடக்கம். இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்க்க, முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
வங்கதேசத்தின் ஓப்பனர்ஸ் லிட்டன் தாஸ், சௌமியா சர்கர் நிதானமான தொடக்க தந்தாலும், பும்ராவின் அட்டகாசமான 'Brace' ஓவரில் வங்கதேசம் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், லிட்டன் தாஸ் - முஷ்ஃபிகுர் ரஹீம் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் பயனில்லை. குறிப்பாக, பேட்டிங்கில் ஜொலிக்காத விஜய் ஷங்கரின் பவுலிங்கும் "Dibbly Dobbly" ரகத்திலேயே இருக்க, கோலி வெறுத்து தான் போனார். பந்துவீச்சில் வேரியேஷன் இல்லை, வேகம் இல்லை, விவேகமும் இல்லை. (Limited Skill கொண்ட ஆல் ரவுண்டரோ என்ற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!)
பிறகு, குல்தீப், சாஹலின் ரிஸ்ட் ஸ்பின்னில் விக்கெட்டுகள் விழ, 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு அடங்கிப் போனது வங்கதேசம்.
மொத்தத்தில், உலகக் கோப்பையில் இந்திய அணியின் 4வது டவுன் வீரர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்த நிலையில், லோகேஷ் ராகுல் அதற்கு பக்காவாக பதில் அளித்து விராட் கோலியின் நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுத்து இருக்கிறார்.