தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி20 போட்டி, தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நேற்று (அக்.,29) நடைபெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் போட்டியில் தென்., வெற்றிப் பெற்றது. இதனால், தொடரை சமன் செய்ய, வெற்றிப் பெற வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் களமிறங்கியது. டாஸ் வென்று வங்கதேசம் ஃபீல்டிங் செய்தது.
தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய வங்கதேசம் அணி, தென்னாப்பிரிக்க அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தியது. 9.5 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களே தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது. கேப்டன் டுமினி 4 ரன்களிலும், டி வில்லியர்ஸ் 20 ரன்களிலும் நடையைக் கட்டினர். மறுமுனையில், தொடக்க வீரர் ஹஷிம் அம்லா மட்டும் அரைசதம் அடித்து தனியாக போராடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் களமிறங்கிய டேவிட் மில்லர், 0 ரன்னில் கொடுத்த தனது விக்கெட் வாய்ப்பை வங்கதேசம் வீணடித்தது. இதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வங்கதேச வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்துவிட்டார்.
9 பிரம்மாண்ட சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார் மில்லர். சர்வதேச டி20 போட்டியில் அதிவேக சதம் இதுவேயாகும். குறிப்பாக, 19-வது ஓவரை வீசிய முஹமத் சைஃபுதின் ஓவரில் வரிசையாக ஐந்து சிக்ஸர்களை விளாசித் தள்ளினார். இதுதான் மில்லரின் முதல் டி20 சதம் என்பதும், இப்போட்டி தென்னாப்பிரிக்க அணியின் 100-வது சர்வதேச டி20 போட்டி என்பது கூடுதல் ஸ்பெஷலாகும்.
அம்லா 51 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.
இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் 18.3-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை டேவிட் மில்லர் வென்றார்.
இதுகுறித்து மில்லர் அளித்த பேட்டியில், "இது உண்மையில் மிகவும் அற்புதமான தருணம் எனக்கு. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், முதலில் நான் கவனக்குறைவுடன் தான் விளையாடினேன். அதன்பின், பந்தை உன்னிப்பாக கவனித்து ஆடினேன். இறுதியில் அனைத்தும் தித்திப்பாக அமைந்துவிட்டது" என்றார்.