'எல்லோரும் என்னை மன்னியுங்கள்'! - ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்!

இனி ஆஸ்திரேலிய அணிக்காக நான் ஆடுவேன் என்றோ, எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றோ நான் நினைக்கவில்லை

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர், செய்தியாளர்கள் முன்பு பேட்டியளித்து அனைவரிடமும் மன்னிப்பு கோரினார்.

இதுகுறித்து அழுதுகொண்டே அவர் அளித்த பேட்டியில், “நேர்மையாக சொல்கிறேன், கிரிக்கெட் மூலம் என்னுடைய நாட்டிற்கு எப்போதும் பெருமை சேர்க்க வேண்டும் என்றே நான் விரும்பினேன். ஆனால், அதற்காக நான் செய்த செயல், வாழ்நாள் முழுவதும் நான் வருத்தப்படும் நிகழ்வாக மாறிவிட்டது. கேப்டவுனில் நடந்த சம்பவத்திற்கு துணை கேப்டன் என்கிற முறையிலும், அதில் ஈடுபட்டவன் என்கிற முறையிலும் முழு பொறுப்பேற்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

இதற்கு மன்னிப்பே கிடையாது. இருப்பினும், நான் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, எனது மனைவி மற்றும் மகள்களிடம் மன்னிக்க வேண்டுகிறேன். இனி இதுபோன்ற நிலையை நீங்கள் சந்திக்க விட மாட்டேன் என உறுதியளிக்கிறேன். ஆஸ்திரேலிய மக்களிடம் மீண்டும் நன்மதிப்பை பெறுவதற்கான அனைத்தையும் நான் நிச்சயம் செய்வேன்.

நான் மீண்டும் என் நாட்டிற்காக பெருமை சேர்க்க கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று மிக நுண்ணிய நம்பிக்கை உள்ளது. ஆனால், உண்மையில் நான் பதவி விலகிய பிறகு இது நடக்குமா? என்பது தெரியவில்லை.

இனி வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் என்ன நடந்தது என்பது குறித்து யோசிப்பேன். ஒரு மனிதனாக நான் யார் என்பதையும் சிந்திப்பேன்.

நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், இதெல்லாம் எப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக என்னுடைய பொறுப்புகளில் நான் தோல்வியடைந்து விட்டேன். இனி ஆஸ்திரேலிய அணிக்காக நான் ஆடுவேன் என்றோ, எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றோ நான் நினைக்கவில்லை” என்றார் கண்ணீருடன்.

முன்னதாக, கடந்த வியாழன் அன்று ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்களை சந்தித்து கண்ணீர் விட்டு மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close