உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு செல்லும் முதல் இந்திய வீரராக தேவிந்தர் சிங் காங் சாதனை படைத்திருக்கிறார்.
உலகள தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் நடைபெறுகிறது. இதில், ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதற்கான தகுதிச்சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பஞ்சாப்பை சேர்ந்த 26 வயது வீரரான தேவிந்தர் சிங் காங் குரூப் பி தகுதிச்சுற்று பிரிவில் கலந்துகொண்டார். முதலாவதாக 82.22 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இரண்டாவதாக 82.14 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் 83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். அதன்பின், கடைசி வாய்ப்பில் 84.22 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். 83 மீட்டருக்கு மேல் ஈட்டி எறியும் வீரர்கள் அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள். அதன்படி, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் முதல் இந்திய வீரராக தேவிந்திர சிங் காங் சாதனை படைத்திருக்கிறார்.
மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவால் 83 மீட்டருக்கு மேல் எறிய முடியவில்லை. அதனால், அவரால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
குரூப் ஏ தகுதிச்சுற்றில் 5 பேரும், குரூப் பி தகுதிச்சுற்றில் 8 பேரும் என 13 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு செல்கின்றனர்.
இந்த போட்டியில், தேவிந்தர் சிங் ஏழாவது இடத்தில் வகிக்கிறார். தகுதிச்சுற்றின்போது, தேவிந்தர் சிங்குக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
“நான் எனது நாட்டிற்காக இந்தியர் எவரும் செய்யாத சாதனையை செய்ய வேண்டும் என நினைத்தேன். இப்போது கடவுளின் அருளால் என் நாட்டிற்கு நான் ஏதோவொன்றை செய்திருக்கிறேன்.”, என தேவிந்தர் கூறினார்.
தனது தோள்பட்டையின் வலியை நீக்குவதற்காக தான் தனது நண்பரிடமிருந்து சில பயிற்சிகளை இறுதிப்போட்டிக்கு முன்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.