ஐபிஎல் திருவிழா 2018: சாம்பார் மோடில் இருந்து மாறுமா டெல்லி டேர்டெவில்ஸ்?

ஆக்ரோஷத்தில் ரிக்கி பாண்டிங் ஹெட் மாஸ்டர் என்றால், கெளதம் கம்பீர் அவரது பள்ளியின் முதல் மாணவன்.

11வது ஐபிஎல் தொடர் வரும் ஏழாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நடப்பு தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணி குறித்தும் ஐஇ தமிழ் சார்பாக அலசுவோம்.

முதல் நாளான இன்று, டெல்லி டேர் டெவில்ஸ் அணி குறித்து பார்க்கலாம்.

நம்மூரில் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’ என்று சொல்வார்கள். அதற்கு சரியான உதாரணம் இந்த அணி. ஆரம்பக் காலக் கட்டத்தில் பேட்டிங்கில் மிக வலிமையான அணியாக டெல்லி வலம் வந்தது. சேவாக், கம்பீர், டி வில்லியர்ஸ், தில்ஷன், மனோஜ் திவாரி, தினேஷ் கார்த்திக் என கிளாஸ், மாஸ் பேட்டிங் லைன் அப் கொண்டிருந்தது.

ஆனால், எவ்வளவு தான் தரமான வீரர்கள், நல்ல கோச் என கட்டமைக்கப்பட்டாலும், ஐபிஎல் கோப்பை என்பது இந்த அணிக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. 2008 மற்றும் 2009ல் அரையிறுதி வரை இந்த அணி முன்னேறியது. 2010, 2011ல் லீக் சுற்றோடு வெளியேற, மீண்டும் 2012ல் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

அதற்கு பின், 2017 வரை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள், லீக் சுற்றோடு தனது பணியை முடித்துக் கொண்டு வெளியேறி விடுகிறது டெல்லி டேர் டெவில்ஸ்.

இந்தாண்டு எப்படியும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என கண்ணும் கருத்துமாக, காய்களை நகர்த்தி வருகிறது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி. முதன் முறையாக, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளராக களமிறக்கியுள்ளது டெல்லி நிர்வாகம். அம்பானியின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த பாண்டிங்கை, தனது பக்கம் இழுத்துள்ளது. இதற்கு காரணமும் உள்ளது. என்ன தெரியுமா?

அக்ரெஷன்!. ஆம், முழுக்க சாம்பார் அணியாக மாறிப் போயுள்ள டெல்லி அணியில் காரமாக மசாலாவை அள்ளித் தெளித்து மீன் குழம்பு வைக்கவே பாண்டிங்கை தேர்வு செய்துள்ளது. வீரர்களிடையே அவரால், ஆக்ரோஷத்தை உருவாக்க முடியும். ஆஸ்திரேலியர்களுக்கு அது கை வந்த கலை. ஸ்டீவ் ஸ்மித் படிச்ச ஸ்கூல்ல பாண்டிங் ஹெட் மாஸ்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!.

ஆக, இந்தாண்டு தனது முதல் முயற்சியிலேயே டெல்லி நிர்வாகம் வெற்றிப் பெற்றது.

சரி! வீரர்கள் யார் யார்? அவர்கள் நிலை என்ன?

வீரர்கள் பற்றி பார்ப்பதற்கு முன், கேப்டன் பற்றி கொஞ்சமாக பேசி விடுவோம். உங்களுக்கெல்லாம் தெரிந்த நம்ம கெளதம் கம்பீர் தான். கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கப் வாங்கிக் கொடுத்துட்டு, ‘நா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற மோடில் டெல்லி அணிக்கு மீண்டும் கேப்டனாகியுள்ளார்.

ஆக்ரோஷத்தில் ரிக்கி பாண்டிங் ஹெட் மாஸ்டர் என்றால், கெளதம் கம்பீர் அவரது பள்ளியின் முதல் மாணவன். பார்க்க சாதுவாக, அமுல் பேபி கணக்காக தோற்றமளிக்கும் கம்பீர், களத்தில் எவ்வளவு ஆக்ரோஷம் காட்டுவார் என்பது ஓவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். கோலி – கம்பீர் ஐபிஎல் சண்டையை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?.

ஆக்ரோஷம் மட்டுமல்ல, பரிசோதனை முயற்சிகளை அடிக்கடி செய்து பார்ப்பவர் கம்பீர். சும்மாவா, ஸ்பின் பவுலராக இருந்த சுனில் நரைனை, தொடக்க வீரராக களமிறக்கி, எதிரணி பவுலர்களை கதி கலங்க வைத்தார்!. ஆக, டெல்லி அணியின் கோச் மற்றும் கேப்டன் அந்த அணியின் மிகப்பெரிய பலம் என்பதே நமது கருத்து.

வீரர்களை பொறுத்தவரையில், உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேன்கள் இந்த அணியில் தான் உள்ளனர். காலின் மன்ரோ மற்றும் கிளென் மேக்ஸ்வெல். தவிர ஜேசன் ராய், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, U-19 உலகக் கோப்பையில் கலக்கிய கேப்டன் ப்ரித்வி ஷா, இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மன்ஜோத் கல்ரா என்று தரம் வாய்ந்த திறன் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

மேலும், விஜய் ஷங்கர், கிரிஸ் மோரிஸ், டேனியல் கிறிஸ்டியன், குர்கீரத் சிங் என சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். காகிசோ ரபாடா, டிரென்ட் போல்ட், முகமது ஷமி, அமித் மிஸ்ரா, ஷபாஸ் நதீம், மைக்கேல் கிளார்க்கின் கண்டுபிடிப்பான நேபாளைச் சேர்ந்த சந்தீப், சயன் கோஷ் உட்பட அனுபவமும், இளமையும் வாய்ந்த பவுலிங் கட்டமைப்பும் கொண்டிருக்கிறது டெல்லி அணி.

இந்த முறை நிச்சயம், கப் மிஸ் ஆகாது என்று டெல்லி நிர்வாகம் நம்புகிறது. ஆனால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலே, அது மிகப்பெரிய விஷயம் தான் என பாண்டிங்கிற்கு நன்றாகவே தெரியும். அது நிச்சயம் நடக்கும் என்பது நமது கணிப்பும் கூட!.

ஒட்டுமொத்தமாக, நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில், மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கும் டீமாக டெல்லி டேர் டெவில்ஸ் விளங்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள், வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசி கட்டத்தில் அடிக்க முடியாமல் தவித்த நம்ம விஜய் ஷங்கரை, ரிக்கி பாண்டிங் எப்படி பட்டை தீட்டுக்கிறார் என்று மட்டும் பாருங்கள். அவர் ஐபிஎல் தொடரில், விளாசப் போவது உறுதி!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close