ச. மார்ட்டின் ஜெயராஜ்
11-வது புரோ கபடி லீக் போட்டிகள் ஐதராபாத் மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. 12 அணிகள் களமாடி வரும் இந்த தொடரில் சென்னையை மையமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அசத்தலாக செயல்பட்டு வருகிறது. இரண்டு பயிற்சியாளர்கள், சில புதுமுக வீரர்கள் என இந்த சீசனில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி இருக்கிறது.
பலமான அணி என்பது பேப்பரில் மட்டுமல்ல, களத்திலும்தான் என்பதை தங்களது தொடக்க ஆட்டத்திலே நிரூபித்து இருக்கிறார்கள் தமிழ் தலைவாஸ் வீரர்கள். அவர்கள் தங்களது தொடக்க ஆட்டத்தில், சொந்த மைதானத்தில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய தெலுங்கு டைட்டன்ஸ் அணியை புரட்டி எடுத்தனர். நரேந்தர் ஹோஷியார் மற்றும் சச்சின் தன்வார் ஆகிய இருவரும் களத்தில் அனலாக இருந்தனர். அவர்களின் தீப்பொறி ஆட்டத்தில் சிக்கி 44 - 29 என்கிற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் சருகாய் பொசுங்கியது.
இந்த வெற்றி உற்சாகத்துடன் இன்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கும் புனேரி பால்டன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் களம் காணுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, தமிழ் தலைவாஸுக்கு இரண்டு பயிற்சியாளர்கள் உள்ளார்கள். அவர்களில் தலைமைப் பயிற்சியாளராக உதய குமார் இருக்கிறார். மற்றொருவர் வியூக பயிற்சியாளர் தர்மராஜ் சேரலாதான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சேரலாதான் பற்றி கபடி ரசிகர்களுக்கு அதிகம் விவரிக்க தேவையில்லை. இந்திய கபடியின் ஜாம்பவானாக அவர் வலம் வருகிறார். சர்வதேச கபடி அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார். இந்திய அணிவுக்காக களமாடி ஏகப்பட்ட பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.
குறிப்பாக, 2016 ஆம் ஆண்டு கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் முக்கிய வீரராக தர்மராஜ் சேரலாதான் பங்காற்றி இருந்தார். 'அண்ணா' என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவர், புரோ கபடி லீக்கிலும் ஒரு சுற்று வந்துள்ளார். அவர் இந்த தொடருக்கான சீசன் 4 இல் பாட்னா பைரேட்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.
தஞ்சை மண்ணில் விவசாய குடும்பத்தில் பிறந்து, சர்வதேச கபடியில் கோலோச்சிய தர்மராஜ் சேரலாதான், தனது 48 வயது வரை கபடி களத்தில் துள்ளிக் குதித்து ஆடினார். அதன்பிறகு, தனது ஓய்வை அறிவித்தார். தற்போது 49 வயதாகும் அவர், தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
தனது அணி வீரர்கள் வெற்றிகளை ருசிக்க வியூகங்களை வகுத்து, திட்டங்களை தீட்டிக் கொடுப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வரும் அவரை அலைபேசியில் கொண்டு தொடர்பு பேசினோம். வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதான் தமிழ் தலைவாசுடன் இணைந்து பற்றி நாம் அவரிடம் கேட்டபோது, "தமிழ் தலைவாஸ் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் துணை பயிற்சியாளர் என இல்லாமல் வியூக பயிற்சியாளராக எனக்கு அழைப்பு விடுத்தார்கள். எனது அனுபவங்கள், திறன், கபடி பற்றிய அறிவு உள்ளிடவை பற்றியும் கேட்டார்கள். என்னைப் பற்றிய தரவுகளும் அவர்களிடம் இருந்தது. நான் ஒப்புக் கொண்ட பிறகு, அணியில் இணைந்தேன்." என்றார்.
பயிற்சியாளர் ஆஷன் குமாரின் தலைமையிலான தமிழ் தலைவாஸ் கடந்த 9 சீசனில், முதல்முறையாக அரைஇயறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. ஆனால், கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது. இது ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்தது. தற்போது, இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. அதனால், இம்முறை அணியிடம் இருந்து தொடர் வெற்றிகளை எதிர்பார்க்கலாமா? என்று வியூக பயிற்சியாளரிடம் நாம் கேட்ட போது, "என்னைப் பொறுத்தவரை, தமிழ் தலைவாஸ் அணியினர் நன்றாகவே பெர்பாமன்ஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
முதல் போட்டியை சிறப்பாக ஆடி இருக்கிறார்கள். வரப் போகிற போட்டிகளை நன்றாக ஆடுவார்கள். திரும்பவும் தொடர் வெற்றிகளை பெறுவோம். வெற்றி நமக்கு தான். அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. இன்னும் 22 போட்டிகள் இருக்கிறது. அதில் நாங்கள் சிறப்பாக ஆட வேண்டும். முடிந்த அளவுக்கு நேரடியாக செமி ஃபைனலில் ஆட முயற்சி செய்வோம்." என்று அவர் கூறினார்.
இரட்டை பயிற்சியாளர் முறை பற்றி அவர் பேசுகையில், "துணை பயிற்சியாளர் என்பதற்கு பதிலாக, வியூக பயிற்சியாளர் என்கிற பொறுப்பை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். எது எப்படி இருந்தாலும், அணிக்கு என்ன தேவையோ அதில்தான் நாம் கவனம் செலுத்துவோம். வீரர்களுக்கு நல்ல பயிற்சியை வழங்கி, எதிரணியின் வியூகங்களை முறியடிப்போம்.
அணியில் நரேந்தரும் சிறந்த லெஃப்ட் ரைடர், சச்சினும் நல்ல லெஃப்ட் ரைடர். இரண்டு பேருமே நன்றாக பெர்பாமன்ஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் டிஃபென்ஸில் கொஞ்சம் வீக்-காக இருப்பது போல் தோன்றுகிறது. அதனால், தேர்டு ரைடரை வைக்காமல் ஒரு டிஃபென்ட்ரை உள்ளே வைத்து ஆடிக் கொண்டு இருக்கோம்.
இப்போது, இந்த தொடரில் ஒரு போட்டியில் தான் ஆடி இருக்கிறோம். தொடர்ந்து ஆட ஆட தான் எந்தெந்த வீரர்கள் தவறு செய்கிறார்கள் என்பது தெரிய வரும். அப்படி நாம் அறியும் போது, யாரை உள்ளே வைக்க வேண்டும், யாரை வெளியே எடுத்து ஆட வேண்டும் என முடிவு செய்வோம். இதையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நாம் மாற்ற முடியும்.
சில வீரர்கள் பயிற்சி போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள். ஆனால், லீக் போட்டியில் சொதப்புவார்கள். அதனை மாற்ற வேண்டும். வெளியே இருக்கும் ரைடர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் கவர், கார்னர் இடங்களில் ஆடும் வீரர்களுக்கும் நாம் வாய்ப்பு கொடுப்போம். எல்லாருக்குமே எல்லா வாய்ப்பும் கிடைக்கும். இப்போது அணியை நன்றாக பெர்பாமன்ஸ் செய்ய வைத்து கொண்டு சென்றால், மற்றவை ஈசியாக இருக்கும்" என்று வியூக பயிற்சியாளர் தர்மராஜ் சேரலாதான் கூறினார்.
கபடி வீரர்களுக்கு காயம் என்பது, பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறது. 9-வது சீசனில் முன்னணி வீரர் பவன் செராவத் காயம் அடையாமல் இருந்திருந்தால், தமிழ் தலைவாஸ் ஒருவேளை இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறி இருக்கலாம். அதனால், வீரர்கள் காயம் அடைவதை இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் எப்படி சமாளிக்க போகிறது? என்பது பற்றி வியூக பயிற்சியாளர் பேசுகையில், "எல்லா விளையாட்டிலும் காயம் பொதுவானது தான். கபடி என வரும்போது, கொஞ்சம் அதிகமாக காயம் ஏற்படும். அதனை இந்த சீசனில் முடிந்த அளவுக்கு நாங்கள் தவிர்க்க பார்ப்போம். பாதுகாப்பாக ஆட நினைப்போம்." என்றார்.
அவரது வருகை எப்படி தமிழ் தலைவாசுக்கு உதவும் என நாம் வியூக பயிற்சியாளர் தர்மராஜ் சேரலாதானிடம் கேட்ட போது, "விளையாடிய எனது அனுபவம், இதுவரை நான் கற்றுக் கொண்டவை என அனைத்தையும் வைத்து தான் எனது திட்டமிடலும், வியூகமும் இருக்கிறது. அதனைக் கொண்டு அணியை வெற்றி பெறச் செய்வது எனது நோக்கம்.
அணி வீரர்களுக்கு எந்த அளவுக்கு சுமை கொடுக்க வேண்டும், அதாவது பிராக்டிஸ் மற்றும் ஃபிட்னஸ் வொர்க் அவுட் எவ்வளவு கொடுக்க வேண்டும், வீரர்களின் மன நிலை எப்படி இருக்கிறது போன்றவற்றை புரிந்து கொண்டு தான் நாம் செயல்பட வேண்டும். அணியில் இருக்கும் அனைவரையும் அணைத்து, ஒரு குடும்பம் போல சரிப்படுத்தி, கட்டுக்கோப்பாக இருந்து கொண்டு போக வேண்டும்." என்று அவர் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.