இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் தோனிக்கு நேற்று 37வது பிறந்தநாள். உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அவரது பிறந்தநாளை தங்களது பிறந்தநாளை போல கொண்டாடி வருகின்றனர். களத்திற்கு உள்ளே நாயகனாகவும், களத்திற்கு வெளியே கதாநாயகனாகவும் விளங்கும் தோனியைப் பற்றிய சிறிய கட்டுரை இது. குறிப்பாக தோனிக்கும், பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவைப் பற்றி லேசாக அலசும் கட்டுரை இது.
நீண்ட சடை கொண்டு, இந்திய அணியில் முதன்முறையாக வங்கதேச அணிக்கு எதிராக தோனி களமிறங்கிய போது, அவரது ஸ்கோர் 0. அடுத்தடுத்த மூன்று போட்டிகளையும் சேர்த்து அவரது மொத்த ஸ்கோர் 22. ஆக, நான்கு போட்டிகளில் அவரது மொத்த ரன்கள் 22. அப்போதுதான், ஒரு ஆச்சர்ய சம்பவம் அரங்கேறியது. 2005ம் ஆண்டு, ஏப்ரல் 5ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவம் அது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், சச்சின் அவுட் ஆன பின்னர், டிராவிட் களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஒன் டவுன் வீரராக களமிறக்கப்பட்டார் தோனி. 123 பந்தில் 148 ரன்கள். களத்தில் முழுதாய் 155 நிமிடங்கள் நின்ற தோனி, 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் உதவியுடன் 148 ரன்கள் குவிக்க, ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் ஹீரோவாய் ஒரே நாளில் உருமாறினார் தோனி. பாகிஸ்தானிற்கு எதிராக தோனியின் முதல் பிணைப்பு இந்தப் போட்டி தான்.
2005/2006 ல் பாகிஸ்தான் சென்ற இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, 4-1 என்ற கணக்கில் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தோனி. குறிப்பாக, இறுதிப் போட்டி முடிந்தவுடன் நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷரப், "தோனி நான் உங்களது ரசிகன். உங்களது நீண்ட கூந்தல் தான் உங்களை அழகாக்குகிறது. அதனை கட் செய்துவிட வேண்டாம்" என வேண்டுகோள் விடுக்க, பாகிஸ்தான் மக்களிடையே பெரிதும் பேசும் பொருளாய் மாறிப் போனார் தோனி. அந்நாட்டில் தோனிக்கென ரசிகர் வட்டாரம் உருவாக ஆரம்பித்தது.
2007ல் 50 ஓவர் உலகக் கோப்பையில் லீக் சுற்றோடு இந்திய அணி நடையை கட்டியதால், ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த தோனியின் வீடு ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த சோக கரை மறைவதற்குள், உலகக் கோப்பை டி20 தொடரை முதன் முதலாக அறிவித்தது ஐசிசி. சச்சின், கங்குலி, டிராவிட் என மூத்த வீரர்கள் டி20 தொடரில் இருந்து விலக, இளம் படையுடன் தோனி தலைமையில் களம் இறக்கப்பட்டது இந்திய அணி. யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எதிரணி பாகிஸ்தான்.... உலகமே போட்டியை எதிர்நோக்கி காத்திருக்க, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக த்ரில் வெற்றிப் பெற்றது இந்திய அணி. எந்த ரசிகர்களால் தனது வீடு சேதப்படுத்தபட்டதோ, அதே ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டார் தோனி. புரியும்படி சொல்லவேண்டுமெனில், சரிந்த கிடந்த மார்க்கெட்டை, பாகிஸ்தான் மூலம் மீண்டும் ரீபூட் செய்தார் தோனி.
2011 - இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையின் போது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகரான மொஹம்மத் பஷீர் என்பவருக்கு, அரையிறுதிப் போட்டியில் மோதவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் குறித்த தனது ஆதங்கத்தை அவர் சமூக தளத்தில் வெளியிட, சிறிது நேரம் கழித்து, பஷீரை நோக்கி வந்த ஒரு நபர், ஒரு டிக்கெட்டை கையில் கொடுத்து, 'தோனி பாய்' உங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அந்த கணமே தோனியின் ரசிகராக மாறிய பஷீர், இந்திய அணியின் ரசிகராகவும் மாறிப் போனார். இந்தாண்டு(2018) நடந்த நிடாஹஸ் டிராபி தொடரில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. பாகிஸ்தான் இதில் கலந்து கொள்ளவேயில்லை. ஆனால், தோனி எனும் ஒற்றை மனிதனுக்காக, அத்தொடர் நடந்த இலங்கைக்கு வந்து, இந்தியாவுக்கு தனது முழு ஆதரவை அளித்தார் இந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தோனியின் ரசிகர் பஷீர். இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்ற பிறகு, இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி, மைதானம் முழுக்க வலம் வந்தார்.
'நம்புங்கள், என் மனைவியை விட, நான் அதிகம் நேசிப்பது தோனியைத் தான்' என்பது பஷீர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள்.
இறுதியாக, ஒரு பதிவு...
2016 - வங்கதேசத்தில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஒரு இரவு பொழுதில் ஜிம்மில் பயிற்சி செய்துக் கொண்டிருந்த தோனி, பளுதூக்கும் கருவியைத் தூக்கும்போது, திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், நிலைத்தவறி அந்த பளுதூக்கும் கருவியோடு கீழே விழுந்தார். இதனால், தோனியால் நகரவே முடியவில்லை. ஊர்ந்து வந்து எச்சரிக்கை மணியை அடித்தார். உடனடியாக வந்த மருத்துவக் குழு அவரை ஸ்ட்ரெட்சரில் தூக்கி வைத்து கொண்டுச் சென்றனர்.
ஆசியக் கோப்பை விதிகளின்படி 24 மணி நேரத்துக்கு முன்பு அணி வீரர்களை அறிவிக்க வேண்டும். எனவே, வேறு வழியில்லாமல் தோனிக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேல் வரவழைக்கப்பட்டார்.
போட்டி நடைபெறும் நாள் வந்தது. பேடை காலில் கட்டிக் கொண்டு தோனி பயிற்சிக்கு வந்ததைப் பார்த்து அனைவரும் ஒருகணம் அதிர்ந்தனர். அன்று மதியம் அணி அறிவிக்கப்படுவதற்குள் தோனி முழுமையாக அந்த போட்டிக்கு தயாராகிருந்தார். அவருடைய அறைக்கு என்னை அழைத்து, ‘நீங்கள் ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள்? எனக்கு ஒரு காலே போய்விட்டாலும், நான் பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடியே தீருவேன்’ என்றார். வெறித்தனத்துடன் காயத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடி, அந்த ஆட்டத்தில் அணியை வெற்றிப் பெற வைத்தார் தோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தோனி பற்றி கூறிய சம்பவம் இது.
கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு அணியுடனும், அந்நாட்டு ரசிகர்களுடனும் தோனிக்கு ஒரு பிணைப்பு உள்ளது. ஆனால், பாகிஸ்தான் உடனான பிணைப்பு அதற்கும் மேல் என்றால் அது மிகையல்ல.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.