நாட்டில் பிரச்சனையே இல்லை போல... பெரும்பாலானோருக்கு 'தோனி எப்போது ஓய்வு பெறுவார்?' என்பது தான் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக நெட்டிசன்ஸ்களுக்கு...
அறிவார்ந்த பிள்ளைகள் முதலில் ஒரு விஷயத்தை நன்றாக வெளங்கிக்கிடனும். 30 டிசம்பர் 2014... ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணியின் டிரெஸ்சிங் அறையில் இருந்து ஒரு குரல் சக வீரர்களிடம், 'நான் இன்றோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்' என்கிறது. வீரர்கள், அணி நிர்வாகம் என ஒட்டுமொத்தமும் ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க, பிறகு அணியின் அப்போதைய சூழலை (டெஸ்ட்டில் தொடர் தோல்வி) கருத்தில் கொண்டே, தனது ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது முடிவுக்கு மதிப்பளித்து, விராட் கோலி எனும் ஒரு இளம் வீரனின் கைகளில் இந்திய டெஸ்ட் அணியை ஒப்படைத்தது பிசிசிஐ. அந்த முடிவை எடுத்தவர் தோனி!.
ஓய்வு முடிவை எடுக்க தோனிக்கு தேவைப்பட்டது வெறும் சில மணி நேரங்கள் தான்... ஓய்வு முடிவை கண்களில் திரண்டிருந்த கண்ணீரோடு அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க அவருக்கு தேவைப்பட்டது சில நிமிடங்கள் தான்... 'தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுகிறார்' என்று பிசிசிஐ அறிவிக்க தேவைப்பட்டது சில நொடிகள் தான். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே.
33 வயதில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு 'இனி தனது சேவை தேவையா?' என்பது குறித்து யோசித்து முடிவெடுக்கிற பக்குவம் இருக்கிறது எனில், இன்று 38 வயதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வுப் பெறலாம் என்று யோசித்து முடிவெடுக்கத் தெரியாதா என்ன?
சரி விஷயத்துக்கு வருவோம்... நாளை(ஜூலை.21) வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ள நிலையில், அத்தொடரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், ராணுவத்தில் தனது குழுவுடன் 2 மாத காலம் நேரம் செலவிடப் போவதாகவும் தோனி பிசிசிஐ-யிடம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "நாங்கள் மூன்று விஷயங்களை தெளிப்படுத்த விரும்புகிறோம். தோனி, இப்போதைக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறப் போவதில்லை. தனது ராணுவ குழுவிற்காக அவர் 2 மாதங்கள் பணியாற்றப் போகிறார். தோனியின் இந்த முடிவு குறித்து கேப்டன் கோலிக்கும், தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.