ஆன்டிகுவாவில் நடந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய வரச் சொல்லி, பவுன்சர்களை போட்டு தாக்கியது. இந்த பவுன்சர் புயலில் சிக்கி தவான் 2 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/A681-300x217.jpg)
பின் யுவராஜ் - ரஹானே கூட்டணி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடியது. ஆனால், ரன் ரேட் தான் அப்படியே படுத்துவிட்டது. 26 ஓவர்களில் 100 ரன்களை கடந்த இந்தியா, 42-வது ஓவரில் தான் 170 ரன்களை தொட்டது. இதற்கிடையில் யுவராஜ் வழக்கம் போல், ஸ்பின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள முடியாமல், லெக் பிரேக் ஸ்பின்னரான பிஷூ ஓவரில், 39 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.
இதற்கு பின் களமிறங்கிய தோனி, ரஹானேவுக்கு பொறுமையாக கம்பெனி கொடுக்க, 2-வது போட்டியைப் போல இப்போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 112 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/a680-300x217.jpg)
பின்னர் தோனி - கேதர் ஜாதவ் கூட்டணி அமைத்து, இறுதி வரை களத்தில் நின்றனர். தோனி 79 பந்துகளில் 78 ரன்கள் எடுக்க, ஜாதவ் 26 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. குறிப்பாக, ஸ்பின்னர்களான அஷ்வின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் மொஹம்மது மட்டும் 40 ரன்கள் எடுக்க, 38.1-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் தோற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
26 ஓவர்களில், 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கரை சேர்த்த மஹேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருது வென்றார். நான்காவது ஒருநாள் போட்டி நாளை(ஞாயிறு) நடைபெறுகிறது.