நம்ம 'தல' தோனி மட்டும் கிரிக்கெட் பக்கம் வராமல் இருந்திருந்தால், இந்திய அணியின் டாப் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்திருக்க வேண்டியவர் தினேஷ் கார்த்திக். அவ்வளவு திறமைகளை தன் வசம் வைத்திருந்தும் பெரியளவில் ஜொலிக்க முடியாமல் இருந்த தினேஷ் கார்த்திக்கை, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக்கியுள்ளது கேகேஆர் நிர்வாகம்.
ஷாட்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்... இந்த வரிகளை கொண்டாட உரிமை கொண்ட உலகின் சில கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் 32 வயதான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். பேட்டிங் மற்றுமில்லாது விக்கெட் கீப்பிங்கிலும் 'டாப்பிங்' பெர்ஃபாமராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் இவர்.
தினேஷின் விக்கெட் கீப்பிங் திறமைக்கு ஒரு சின்ன சாம்பிள் இந்த வீடியோ,
https://www.youtube.com/embed/N0UUpbt4PGs
ஆனால், தோனி எனும் மிகப்பெரிய 'சூறாவளி' முன்பு தினேஷ் கார்த்திக் சற்றே காணாமல் போனார். ஆனால், காலம் மாறுகிறது. காட்சிகளும் தற்போது மாறியிருக்கிறது.
நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் தொடரில், தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ், நிச்சயம் அதற்கு தகுதியான வீரர் என்பதில் துளியளவு கூட சந்தேகம் வேண்டாம். ஏனெனில், அவரது செயல்பாடுகள் அப்படி...
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தொடர்ந்து விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கை, இந்தாண்டு 7.4 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதுவரை ஐந்து ஐபிஎல் அணிகளுக்காக தினேஷ் கார்த்திக் ஆடியுள்ளார். இப்போது ஆறாவது அணி. அதுவும் கேப்டனாக... ஆப்ஷனல் கேப்டனாக இல்லை, மெயின் கேப்டனாக!.
March 2018
இதுவரை 152 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள தினேஷ், 2903 ரன்கள் குவித்துள்ளார். திறமை, செயல்பாடு, ஒழுக்கம் என அனைத்தும் ஒருசேர இருந்தும் ஆளுமை என்பது இவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இப்போது அதற்கு சரியான தீனி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நடந்துள்ள டி20 தொடர்களில் கேப்டனாக செயலாற்றியுள்ள மிகப்பெரிய அனுபவம் இவருக்கு உள்ளது. டி20ல் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கின் வெற்றி விகிதம் 72%. டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டு இருப்பதே அவரது திறமைக்கான உதாரணம். இதற்கு கொல்கத்தா கேப்டனாக இருந்தவரும், இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுத் தந்தவருமான கம்பீருக்கு சற்றும் குறைவில்லாத திறமை கொண்ட கேப்டனாக தினேஷ் கார்த்திக் வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.
2004ம் ஆண்டில் 18 வயதில் தோனியால் காணாமல் போன தினேஷ் கார்த்திக்கிற்கு, 32 வயதில் மீண்டும் சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாழ்த்துகள் தினேஷ்!.