'களத்தில் இறங்கிய போது மனதில் ஓடிய எண்ணங்கள்' - மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்!

அவர் யார்க்கர் வீசுவார் என எதிர்பார்த்து, நான் சந்தித்த முதல் பந்தை எதிர்கொள்ள, கிரீசுக்கு வெளியே நின்றேன்

நிடாஹஸ் முத்தரப்பு தொடரில் வெற்றிகரமாக இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்த தினேஷ் கார்த்திக், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வங்கதேசத்திற்கு எதிரான கடைசி பந்தை நான் பவுண்டரி அடிக்கவே நினைத்தேன். அதேசமயம், பந்தை சரியாக பேட்டுடன் கனெக்ட் செய்து அடித்தேன். சௌமியா சர்கர் ஓடி வரும் போதே அவர் யார்க்கர் போட முயற்சி செய்வார் என கணித்தேன். ஆனால், அந்த பந்து யார்க்கராக அமையவில்லை. ஃபிளாட்டாக வந்த அந்த பந்தை நான் அடித்த பின், இது ஒரு நல்ல ஷார்ட் என்பதை உணர்ந்தேன். ஏனெனில், பந்து பேட்டின் நடுவில் பட்டுச் சென்றது. குறிப்பாக, ஷார்ட் அடித்தவுடன் பேட் திரும்பவில்லை. இருப்பினும், பிளாட்டாக சென்றதால், சிக்ஸ் செல்லுமா என சிறிது அச்சப்பட்டேன். இறுதியில் அது சிக்ஸராக மாறிப் போனதில் மகிழ்ச்சி.

விஜய் ஷங்கர் அன்று தடுமாறியது பற்றி பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. இது அவரது முதல் தொடர். இறுதிப் போட்டியில், மிகவும் பிரஷரான சூழ்நிலையில், அவர் களத்தில் நின்றார். பந்தை அடிக்க வேண்டும் என நினைத்தாலும், டைமிங் மிஸ் ஆனதால், அன்றைய நாள் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால், இது அவருக்கு ஒரு சிறந்த பாடமாக இருக்கும். போட்டி முடிந்த பின் அவரிடம் பேசிய போது, விஜய் கான்ஃபிடன்ட்டோடு உற்சாகமாகத் தான் இருந்தார். அதனை அவர் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டார். வரும் காலங்களில் அவர் சிறப்பான வீரராக உருவெடுக்க எனது வாழ்த்துகள்.

விஜய் ஷங்கரை எனக்கு முன்னதாக இறக்கியதற்காக நான் கேப்டன் ரோஹித்திடம் கோபப்பட்டேன் என்று சொல்வது தவறு. அது கோபம் இல்லை. ஏமாற்றம். ஆம்! விஜய்க்கு பிறகு என்னை களமிறங்க ரோஹித் சொன்ன போது, நான் அதிர்ச்சி அடைந்தேன். அது எனக்கு ஏமாற்றமாகவும் இருந்தது. ஆனால், ரோஹித் தலைமையின் கீழ் நான் ஐபிஎல்-ல் விளையாடி இருக்கிறேன். ஒரு வீரராக அவர் என்னை எந்தளவிற்கு மதிப்பார் என்பது எனக்கு தெரியும். அவரது முடிவில் ஒரு காரணம் இருக்கும் என்பதும் எனக்கு தெரியும்.

நான் களமிறங்குவதற்கு முன்பு, எங்களது பவுலிங் கோச் அருகில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது ஒரு அல்லது இரண்டு நல்ல ஓவர்கள் இந்தியாவுக்கு அமைய வேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், நான் பேட்டிங் செய்ய வந்த போது, இரண்டு ஓவர்கள் தான் மீதமிருந்தது. அதனால், அந்த இரண்டு ஓவர்களையும் நல்ல ஓவர்களாக மாற்றுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆகையால், நான் களமிறங்கிய போது, முடிந்தவரை அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்ட முடிவு செய்திருந்தேன்.

லீக் ஆட்டத்தின் போது, ருபெல் ஹொசைன் எனக்கு யார்க்கர் போட்டு இருந்தார். அது ரிவர்சும் ஆனது. அதனால், இம்முறையும் அவர் எனக்கு யார்க்கர் போடத் தான் முயற்சிப்பார் என நினைத்தேன். எப்போது நான் கிரீசுக்குள் நின்று தான் ஆடுவேன். ஆனால், அவர் யார்க்கர் வீசுவார் என எதிர்பார்த்து, நான் சந்தித்த முதல் பந்தை எதிர்கொள்ள, கிரீசுக்கு வெளியே நின்றேன். இதனால், பந்து யார்க்கராக மாறும் முன்னரே சிக்ஸருக்கு தூக்கினேன்.

 

எனக்கு பெரிதாக கொண்டாடுவதில் நாட்டமில்லை. நான் கொஞ்சம் கூச்ச சும்பாவம் உள்ளவன். எங்கள் வீரர்கள் விக்கெட் எடுத்தால் கூட அதிகம் ஆர்ப்பரிக்க மாட்டேன். அதனால் தான் கடைசி பந்தில் சிக்சர் அடித்த பிறகு நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், வேறொரு நாளில் வேறொரு விதத்தில் இந்த மகிழ்ச்சியை நான் கொண்டாடுவேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை இதிலிருந்து மாறுகிறதா? என்று கேட்டால் எனக்கு தெரியாது என்பேன். ஏனெனில், ஒவ்வொரு முறையும் சுற்றுப்பயணங்களில் போது, நான் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகியே இருப்பேன். என்னைப் பற்றிய கட்டுரைகளை கூட படிக்க மாட்டேன். மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று இப்போது என எனக்கு தெரியாது என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.

இதுதவிர, இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக், “களத்தில் தமிழில் பேசியது இவ்வளவு பெரிய விவாதத்துக்கு உள்ளாகும் எனத் தெரியவில்லை. வாஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் ஆகியோரிடம் எப்போதும் நான் விளையாடும் போது தமிழில் தான் பேசுவேன். அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் அது என வித்தியாசமாக இருக்கும். மற்றபடி, எதிரணி வீரர்களை குழப்புவதற்காக செய்த ஸ்ட்ராடஜி-லாம் கிடையாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. ஏலத்தின் போது, எந்த அணியாலும் இந்த வீரர் தான் வேண்டும் என நினைத்து எடுக்க முடியாது. சூழ்நிலைகளை பொறுத்து, அணிகளின் முடிவும் மாறும். மும்பைக்காரன், டெல்லிக்காரன் கூட சென்னை அணிக்காக ஆடுகிறார்கள். வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு அணிகளுக்காக ஆடுவது தான் ஐபிஎல்-ன் சிறப்பம்சமே” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close