இலங்கையில் அவசர நிலை பிரகடனம்! இந்திய கிரிக்கெட் அணியின் நிலை குறித்து முக்கிய தகவல்!

இலங்கையில் அவசர நிலை பிரகடனம். இந்திய கிரிக்கெட் அணியை மீட்டுக் கொண்டுவர இந்திய அரசு முடிவு?

இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுவதற்காக சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களில் புத்த மதத்தைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்லாமிய சமூகத்தினரும் புத்த மதத்தினர் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஆரம்பித்தது. இதனிடையே இந்த மோதலில் புத்த மத அமைப்பைச் ஒருவர் மரணமடைந்தார். இதனால் இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிறுவனங்களை சூறையாடியும் புத்த மத அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், இன்று காலை கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வன்முறை கட்டுப்படாமல், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. இதன் காரணமாக அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திஷ்யநாயக தெரிவித்தார். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியும், வங்கதேச கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு சென்றுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி இந்தியாவுக்கும் , இலங்கைக்கும் இடையே இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்படுத்தப்பட்டுள்ளதால், திட்டமிட்டப்படி இத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், இந்திய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படி இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய போட்டி நடைபெறுவது குறித்து எந்த உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. போட்டி நடைபெறும் இடம் கொழும்பு என்றாலும், நாடு முழுவதும் கலவரம் பரவி வருவதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறப்படுகிறது.

ஒருவேளை, நிலைமை கையை மீறி போகும் பட்சத்தில், இந்திய அரசு துரிதமாக செயல்பட்டு வீரர்களை மீட்டுக் கொண்டு வரும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், “திட்டமிட்டப்படி முத்தரப்பு டி20 தொடர் நடைபெறும். இந்திய வீரர்களின்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்” என இந்திய அணியுடன் சென்றுள்ள பிசிசிஐ- யின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close