இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டி 20 போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்தியா தோற்றது. ரோஹித் இன்னும் அணிக்கு தேவையா?
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது.
இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் சதம் அடித்தும், குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தியும் அசத்தினர். அந்த வெற்றி உற்சாகத்துடன் இந்திய அணி நேற்று(ஜூலை 6) 2-வது டி 20 போட்டியில் கார்டிஃப் நகரில் இங்கிலாந்துடன் மோதியது.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அதே வீரர்களை அதே வரிசையில் இறக்கியது. இங்கிலாந்தின் டேவிட் வில்லி, ஜேக் பால் ஆகியோரின் ஸ்விங் தாக்குதலில் ரோகித் ஷர்மா ரொம்பவே திணறினார்.
தொடக்க ஆட்டக்காரரான அவர், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விலகிச் செல்லும் பந்துகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லாமல் தடுமாறியது பரிதாபமாக இருந்தது. 10 போட்டிகளில் சரியாக ஆடாமல், 11-வது போட்டியில் டபுள் செஞ்சுரி அடித்து சாதனை நாயகனாக மிளிரும் ரோகித் அணிக்கு தேவையா? என்கிற எண்ணம் அப்போதே தோன்றியது.
ரோகித் ஷர்மா 9 பந்துகளில் வெறும் 5 ரன்களுக்கு ஜேக் பால் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், அவுட் ஸ்விங்கர்களை சற்றே ஆஃப் சைடை நோக்கி நகர்ந்து நின்றுகொண்டு லெக் சைடை நோக்கி திருப்பிக்கொண்டிருந்தார். பந்துகளை அவர் எதிர்கொண்ட விதம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
ஆனால் ‘சின்னப்புள்ளத்தனமாக’ அவரது அவுட் அமைந்ததுதான் சோகம்! 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அவரை ரன் அவுட் ஆக்கினார். சிங்கிள் தட்டிவிட்டு ஓடிய ஷிகர் தவான் சுலபமாக எதிர்முனையை அடைந்துவிட்டார். ஆனால் பேட்டை கிரீஸுக்குள் வைக்கவில்லை. அதே வேளையில் அவரது கால்களும் கிரீஸுக்குள் வராமல் அந்தரத்தில் நின்றது.
இதனால் மூத்த வீரரான ஷிகர் தவான், பள்ளிச் சிறுவர்கள் அவுட் ஆவது போன்ற விதமாக அவுட் ஆகி வெளியே போனார். கடந்த ஆட்டத்தைப் போலவே 2-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த லோகேஷ் ராகுல், ஸ்டம்பை குறி வைத்து பிளங்கட் விசிய பந்தை ஸ்ட்ரெயிட்டாக தூக்கியடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரை ஏமாற்றிவிட்டு, ஸ்டம்பை சாய்த்தது. 8 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார்.
4.5 ஓவர்களில் 22 ரன்களுக்கு டாப் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில் கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கை கோர்த்தனர். இவர்கள் ஓரளவு அணியை கவுரவமான நிலையை நோக்கி நகர்த்தினர்.
20 பந்துகளில் 27 ரன்கள் சேர்ந்த சுரேஷ் ரெய்னா ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். கோலி (38 பந்துகளில் 47 ரன்கள்-அவுட்), டோனி (24 பந்துகளில் 32 ரன்கள்), பாண்ட்யா (10 பந்துகளில் 12 ரன்கள்) ஆகியோர் சற்றே கை கொடுத்தனர். 20 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது.
149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்தை உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் துல்லிய தாக்குதலால் மிரட்டிப் பார்த்தனர். ஜேசன் ராய் (15 ரன்கள்), ஜோஸ் பட்லர் (14 ரன்கள்) ஆகியோரை உமேஷ் யாதவும், ஜோ ரூட் (9 ரன்கள்)டை சாஹலும் காலி செய்தனர்.
ஆனாலும் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதி வரை அவுட் ஆகாமல் (58 ரன்கள்) நின்று பின்வரிசை வீரர்கள் துணையுடன் ஆட்டத்தை முடித்தார். 19.4 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது இங்கிலாந்து. அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்ட நாயகன் ஆனார்.
இந்திய முன்வரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் தோல்விக்கு காரணமாக அமைந்தது. டி 20 தொடர் யாருக்கு? என்பதை முடிவு செய்யும் 3-வது ஆட்டம் ஜூலை 8 அன்று நடக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.